Thursday, March 4, 2010

பதின்ம கால கொசுவர்த்தி!

*ரொம்ப‌ பெரிய‌ கொசுவ‌ர்த்தியா இருக்கேன்னு ஓடிடாதீங்க‌*

மறுபடியும் தீபா அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு பதிவு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு,.


எங்க பள்ளியில உள்ள விடுதியில சில வெளிநாட்டு பிள்ளங்க படிச்சாங்க. முக்கியமா தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, என்.ஆர்.ஐ பசங்கன்னு ஒரு ரேஞ்சா இருக்கும். தாய்லாந்து புள்ளங்கல்லாம் ரொம்ப கோவக்கார புள்ளைங்களாவும் இருப்பாங்க. நாங்க‌ல்லாம் கொஞ்ச‌ம் த‌ள்ளியே இருப்போம்.. அதுல‌ ஒருத்தி தான் நூர்ஜ‌ஹான் (அது அவ‌ளோட‌ இஸ்லாமிய‌ பேர்.. தாய்லாந்து பேர் ம‌ன‌ஸ‌க்குல் சிரிலெர்ட்)..எப்ப‌டியோ நானும், ந‌ஸ் ரீன்னு இன்னொரு தோழியும் நூர்ஜ‌ஹானும் நெருங்கிய‌ தோழிக‌ளாயிட்டோம்..
நான் ப‌தின்ம‌ வ‌ய‌தில் அடியெடுத்து வைத்த‌ ப‌திமூணாவ‌து பிற‌ந்த‌ நாளை ம‌ற‌க்க‌வே முடியாது.. ஏன்னா நூர் என‌க்கு குடுத்த‌ வாழ்த்து அட்டை. அது அவ‌ளே த‌ன் கையால‌ செஞ்ச‌து. ஒரு க‌ருப்பு சார்ட் பேப்ப‌ரையும், வெள்ளை தாளையும் ஜிகினா பேனாவும், ஒரு சின்ன‌ நூலைக்கொண்டும் ரொம்ப‌ அழ‌கா செஞ்சிருப்பா.. அது வ‌ரைக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லாத‌ என‌க்கு, அந்த‌ அட்டைய‌ பார்த்தும் இவ‌தான் என் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு நான் அடைஞ்ச‌ ச‌ந்தோஷ‌த்துக்கு அள‌வே இல்லை..இப்ப‌ நினைச்சாலும் இனிமையா இருக்கு.. அந்த‌ அட்டையும் ப‌த்திர‌மா இருக்கு.. :)

அப்ப‌ எங்க‌ ப‌ள்ளியில‌ புதுசா ஃப‌வுன்ட‌ன் பெப்சி வெச்சிருந்தாங்க‌. சின்ன‌ க‌ப் அஞ்சு ரூபா, பெருசு ப‌த்து ரூபா.. ந‌ம்ம‌கிட்ட‌ல்லாம் ஏது அவ்வ‌ள‌வு காசு.. ஆனா பெப்சிய‌ பார்த்தாலே வாய் ஊரும்.. நாங்க‌ல்லாம் ஒண்ணா சேர்ந்து காசு போட்டு ஒரு பெப்சிய‌ வாங்கி மாத்தி மாத்தி குடிப்போம். அதுக்கே எப்ப‌டா ப்ரேக் வ‌ரும்னு காத்துகிட்டு இருப்போம். பெப்சி மோக‌ம் போல‌வே அந்த‌ வ‌ய‌சில‌ ஆங்கில‌ப்பாட‌ல்க‌ள் கேக்குற‌து ரொம்ப‌ 'கூலா'னா விஷ‌ய‌மா இருந்துச்சு.. அப்ப வ‌ந்த‌ பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், அக்வாவின் பார்பி கேர்ள் பாட்டெல்லாம் ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணி முணுமுணுக்குற‌து பெரிய‌ விஷ‌ய‌ம்.. ந‌மெக்கெங்க‌ அந்த‌ அமெரிக்க‌ன் இங்கிலீஷ் புரிய‌ப்போகுது.. நூர்ஜ‌ஹான் தான் கேச‌ட் க‌வ‌ர்ல‌ இருந்து பாட்டோட‌ வ‌ரிக‌ள் எல்லாம் சொல்லித்த‌ருவா..

அதுக்க‌ப்புற‌ம் பத்தாவ‌துன்னு ப‌டிப்புல‌ கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருக்க‌னும்னு அப்ப‌டி, இப்ப‌டின்னு போயிட்டு..ப‌தினோராம் வ‌குப்பில‌ என் தோழிக‌ள் அறிவிய‌ல் பிரிவுல‌ சேர, வ‌ணிக‌விய‌ல்ல‌ சேர்ந்தேன். அப்போ விடுதியில தங்கும் இன்னும் ரெண்டு பேர்‍: ஃபரா, ஃபரீனா எனக்கு நெருக்கமானாங்க.

தோழிக‌ள் நாங்க‌ இடைவேளைய‌ப்போ ஒண்ணா சேர்ந்துக்குவோம். ஒரு ப‌த்து நிமிஷ‌ம் கேப் கிடைச்சாலும் நாங்க‌ அடிக்கிற‌ லூட்டிக்கு அள‌வே இருக்காது. ப‌ல‌ அட்வென்ச‌ர்க‌ளை நிக‌ழ்த்திய‌தும் அப்ப‌தான். வீட்டுல‌ இருந்து வ‌ர்ற‌ டே ஸ்கால‌ர்க‌ள் எல்லாம் விடுதிக்குள்ள‌ போக‌ கூடாது. ஆனா நாங்க‌ ஸ்போர்ட்ஸ் ப்ராக்டீஸ் ந‌ட‌க்கும் சம‌ய‌த்துல‌ நைசா போயி தோழிமாரோட‌ ஒண்ணா அர‌ட்டை அடிக்க‌ ஆர‌ம்பிச்சுடுவோம்.. அப்ப‌ திடீர்னு வார்ட‌ன் வ‌ர‌வும் நாங்க‌ல்லாம் ப‌ய‌ந்துட்டு க‌ட்டிலுக்க‌டியில‌ ஒளிஞ்ச‌தெல்லாம் நினைச்சா சிரிப்பா வ‌ருது..

அப்புற‌ம் மூணாரு, ம‌று வ‌ருஷ‌ம் ஊட்டி, பொள்ளாச்சின்னு ரொம்ப‌ இனிமையா க‌ழிஞ்ச‌து ப‌ள்ளி நாட்க‌ள்..ப‌ன்னிரெண்டாம் வ‌குப்பு முடியும்போது எங்க‌ கேண்டீன் ஸ்பெஷலான‌ சிக்க‌ன் பிரியாணி மூணு வாங்கி, ஒரு நேர‌த்துல‌ ஒண்ண‌ ம‌ட்டும் திற‌ந்து நான், நூர், நஸ் பேரும‌ ஒண்ணா சாப்பிட்டோம்..இனி இவ‌ங்க‌ள‌ எல்லாம் எப்ப‌ பார்க்க‌ போறோம்னு ரொம்ப‌ க‌ஷ்ட‌த்தோட‌வே பிரிஞ்சு போனோம்..

ந‌ஸ் ரீன் வ‌ண்ட‌லூரில‌, நூர் ஊட்டி, ஃப‌ரா சிங்க‌ப்பூர், ஃப‌ரீனா நாக‌ர்கோயில், நான் அதே ஊருலயும் இப்ப‌டி ஆளுக்கு ஒரு ப‌க்க‌மா போயிட்டோம்.

பள்ளி நாட்கள்ல பேச்சுப்போட்டி, நாடகம்னு சுத்திட்டு இருந்த நான் கல்லூரியில முதன்முதலா வீதி நாடகங்கள் மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு.. முதல் வருஷம் போபால் கேஸ் ட்ராஜடி பத்தி தலைப்பு.. நாங்க பயங்கரமா சொதப்பினாலும் மத்த டிபார்ட்மென்ட்ல உள்ளவங்க பண்றதை பாத்து அசந்து போயிட்டேன்.. அதுவும் அந்த தலைப்ப பத்தி இன்னும் படிக்க தோணிச்சு, அமெரிக்க ஆதிக்கம் மேல முதன்முதல்ல கோவம் வர ஆரம்பிச்சுது.
பிறகு ஈராக் போர். இனி அமெரிக்க பொருட்களையே பாவிக்க கூடாதுன்னு முடிவெடுத்து ரொம்ப முனைப்பா இருந்தேன்.. முக்கியமா பெப்சி, கோக்.. முற்றிலுமாக முடியலன்னாலும் முடிஞ்ச அளவு கடைப்பிடிச்சேன்.. மறு வருஷம் வீதி நாடக போட்டிக்கு தலைப்பே அப்ப பரபரப்பா இருந்த பெப்சி, கோக் பூச்சிக்கொல்லி மருந்து மேட்டர் தான்.. கிடைச்சுதுடா அல்வான்னு, நானே ஸ்க்ரிப்ட் எழுதி, முதல் வருஷம் சேர்ந்த பொண்ணோட உதவியோட அசத்தலா ஒரு நாடகம் போட்டோம்.. கிடைச்சது முதல் பரிசு.. ஏற்கெனவே பள்ளியில நாடகம் எழுதின அனுபவம் இருந்தாலும் எங்க கல்லூரியில போட்டிங்கறது சாதரணம் கிடையாது.. ரொம்ப ச‌ந்தோஷ‌மா இருந்த‌ த‌ருண‌ங்க‌ள் அது..

ம‌று வ‌ருஷ‌ம் வீதி நாட‌க‌ங்க‌ளை ப்ர‌ஃப‌ஷ‌ன‌லா செய்ற‌வ‌ங்க‌ளோட‌ ப‌யிற்ச்சி எடுத்துட்டு மீண்டும் முத‌ல் ப‌ரிசு வாங்கினோம்.. எங்க‌ டீம் ரொம்ப‌வும் பிர‌ப‌ல‌ம‌டைய‌, சென்னையில் உள்ள‌ ப‌ல‌ க‌ல்லூரிக‌ள்ல‌ நாங்க‌ போட்டிக‌ள்ல‌ க‌ல‌ந்துட்டு முத‌ல் ப‌ரிசுக‌ளா வாங்கி குவிச்சோம்.. அதுல‌ முக்கிய‌மான‌து, ஐஐடி சென்னையில‌ ந‌ட‌ந்த்த‌ 'சார‌ங்' அப்போ.. சமூகத்துல நடக்குற அவலங்கள்னு பல விஷயங்கள கலவையா சொன்னோம்.. கிட்ட‌த்த‌ட்ட‌ க‌ல்லும் முள்ளுமா இருந்த‌ த‌ரையில‌ போட்டிய‌ வெச்சாங்க‌.. ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் என்ன‌ ந‌ட‌ந்ததுன்னே தெரியாம‌ நாட‌க‌த்தை முடிச்சோம்.. கைத்த‌ட்ட‌ல்க‌ள்ல‌, கால் வ‌லி தெரிய‌ல‌..போட்டிக்கு ந‌டுவ‌ரா வ‌ந்த‌வ‌ர் வீதி நாட‌கங்க‌ளுக்கு குருவான‌ முத்துசாமி ஐயா.. கொஞ்சம் கூட‌ எதிர்ப்பார்க்காத‌ முத‌ல் ப‌ரிசு.. அந்த‌ வெற்றிய‌ நினைச்சா எதையோ பெரிசா சாதிச்ச‌ திருப்தி இன்னும் இருக்கு..
ச‌த்ய‌ம், ஸ்பென்ச‌ர்னு சுத்தினாலும் எங்க‌ க‌வ‌ன‌மெல்லாம் போட்டிக‌ள்ல‌ தான் அதிக‌மா இருந்த‌தை நினைச்சா ஆச்ச‌ரியமா இருக்கு.. சினிமாவுல‌ வ‌ர்ற‌ மாதிரி எங்க‌ டிபார்ட்மென்ட்டுக்கும் பிகாம் டிபார்ட்மென்டுக்கும் ஆக‌வே ஆகாது.. இதுல‌ ப‌ல‌ வ‌ருஷ‌ங்க‌ளா அவ‌ங்க‌ வாங்கிட்டு இருந்த க‌ல்ச்சுர‌ல் ஷீல்டை நான் செக்ர‌ட‌ரியா இருக்கும்போது எங்க‌ டிபார்ட்மென்ட் வாங்கின‌துல‌ செம்ம‌ க‌டுப்பா இருந்தாங்க‌..எப்ப‌ பார்த்தாலும் ஒரு கோல்ட் வார் இருந்துட்டே இருக்கும்.. :))

எப்ப‌டியோ க‌ல்லூரி ப‌டிப்பு முடிஞ்சுது, ந‌ம‌க்கு 19 வ‌ய‌சாயிட்டு, நாம‌ இப்ப‌ ஒரு டிகிரி ஹோல்ட‌ர்ங்க‌ற‌ எண்ண‌த்தோட‌ க‌ல்லூரியில‌ அடியெடுத்து வெச்சா...என் நினைப்புல‌ எல்லாம் ம‌ண்! என்னால‌ ஹாஸ்ட‌ல் வாழ்க்கையும், அங்குள்ள‌ க‌ஷ‌ட‌மான‌ பாட‌த்திட்ட‌ங்க‌ளையும் ச‌கிச்சுக்க‌வே முடிய‌ல‌.. எப்ப‌ பார்த்தாலும் ஒரே அழுகை தான்.. அங்க‌ ப‌ல‌ பேர் பொறியிய‌ல் ப‌டிப்பும் கூட‌வே வேலை பார்த்த‌ அனுப‌வ‌த்தோடும் தான் வ‌ருவாங்க‌.. அப்போ என்னை ஆற்த‌ல் ப‌டுத்த‌ ப‌ல‌ தோழிக‌ள் சொன்ன‌து ஒரே விஷ்ய‌ம் தான்: "உன‌க்கு வ‌ய‌சு ப‌த்தாது!!"...


என்ன‌ ப‌ண்ண‌, ந‌ம‌க்கெப்போதும் குழ‌ந்தை ம‌ன‌சு தான்.. :))


நான் இந்த‌ ப‌திவை தொட‌ர‌ அழைப்ப‌து ச‌கோத‌ரி ம‌லீக்கா & ஜ‌லீலா