Sunday, December 27, 2009

பிரியாணி சட்டி: 28.12.2009

இங்க வந்து ரெண்டு மாசம் ஆக போகுது.. வீட்ட ரொம்ப தேடினாலும் எனக்கென்னமோ வேற நாட்டுல இருக்குற மாதிரி இல்லை..எங்க பாத்தாலும் நம்ம ஊரு மக்கள்..சேட்டன்மார்கள் நம்ம ஊரு சாமான் ஒண்ணு விடாம இங்க கொண்டு வந்து விக்குறாங்க..எங்க ஆளுக்கு இருமல்ன்னதும் பனங்கற்கண்டு பாலில் காய்ச்சு குடுக்க சொன்னாங்க. கொண்டு வராம இருந்துட்டமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணினேன். சரி கேட்டுத்தான் பாப்போமேன்னு பாத்தா, அட, கிடைச்சுது!என்ன, நம்ம ஊரு துடைப்பம் இல்லாம தான் ரொம்ப கடுப்பா இருக்கு. அல் ஐனில் இருக்குன்னு சொன்னாங்க.. பாப்போம்!
***

நாங்க இருக்கும் ஏரியாவில் நம்ம ஊரு மக்கள் ரொம்பவே அதிகம்! அப்படித்தான் ஒரு நாள் நாங்க கடைக்கு போகும்போது ஒருத்த‌ர் ஃபோன்ல‌ த‌மிழ்ல‌ பேசிட்டே வ‌ந்தார். நானும் அப்போ எங்க வீட்டுக்காரர் கிட்ட‌"ஏங்க‌, துபாய்ல‌ த‌மிழாட்க‌ள் ஜாஸ்தில"ன்னு சொல்லிட்டே வ‌ந்தேன்.. கொஞ்ச‌ நேர‌த்தில‌ அந்த‌ ஆள் ஒரே கெட்ட‌ வார்த்தைக‌ளா பேச ஆர‌ம்பிச்சிட்டாரு.. என‌க்கு தூக்கி வாரி போட்டுருச்சு.. தெரியாத்த‌ன‌மா ச‌ந்தோச‌ப்ப‌ட்டுட்ட‌னோ.. :|
***

அதே மாதிரி இன்னொரு நாள் நாங்க‌ ந‌ட‌ந்து போயிட்டு இருந்தப்போ திடீர்ன்னு ஒருத்தர் பாய்ஞ்சு வந்த மாதிரி வந்து செய்கையால யாசகம் கேட்டார்.. அவர் பாகிஸ்தானி உடை போட்டுட்டு முக‌த்தையெல்லாம் மூடிட்டு ஒரு மாதிரி இருந்தார். செம்மையா ப‌ய‌ந்து, "அல்லாஹு அக்ப‌ர்"ன்னு ரோட்ல‌யே க‌த்திட்டேன்..எங்க‌ வீட்டுக்கார‌ர் இது தான் சான்ஸ்ன்னு ப‌ய‌ங்க‌ர‌மா என்னை ஓட்ட‌ ஆர‌ம்பிச்சுட்டாங்க‌. :(

***

இந்த‌ ஊரில் கூட‌ குப்பை பொறுக்குப‌வ‌ர்க‌ளை பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கு. என‌க்கென்ன‌மோ ந‌ம்ம‌ ஊருல‌ குப்பை பொறுக்குற‌வ‌ங்க‌ குறைஞ்சிட்டாங்க‌ன்ற‌ மாதிரி ஒரு நினைப்பு. க‌ட‌ல் க‌ட‌ந்து வ‌ந்து இதைத்தான் செய்கிறார்க‌ள் என்று அவ‌ங்க‌ உற‌வின‌ர்க‌ளுக்கு தெரிந்தால் வ‌ருத்த‌ப்ப‌டுவாங்க‌ தானே? எங்க‌ தெருவில் ஒரு வ‌ய‌தான‌ பாகிஸ்தானி பெரிய‌வ‌ர் வ‌ந்து குப்பையில் இருக்கும் அட்டை, காலி டின்க‌‌ள் போன்ற‌வ‌ற்றை எடுப்பார். ஒரு நாள் பார்த்தா அதில‌ உள்ள‌ பெரிய‌ பெரிய‌ ரொட்டிக‌ளை எடுக்க‌ ஆர‌ம்பிச்சிட்டார்.. என‌க்கு ரொம்ப க‌ஷ்ட‌மா போச்சு..அப்புற‌ம் தான் கேள்விப்ப‌ட்டேன் அதெல்லாம் ஒட்ட‌க‌த்துக்கு போட‌ எடுக்குறாங்க‌ன்னு.. ஏதோ கொஞ்ச‌ம் நிம்ம‌தியா இருந்துச்சு..

***
ஒரு ப‌க்க‌ம் வேட்டைக்கார‌ன், இன்னொரு ப‌க்க‌ம் க‌ந்த‌கோட்டை. சன் டிவி சார்ந்த‌ சேன‌ல்க‌ளில் வேட்டைக்கார‌ன் தொல்லைன்னா, ம‌த்த‌ எல்லா சேன‌ல்க‌ளிலும் க‌ந்த‌கோட்டை தொல்லை.. தாங்க‌ முடிய‌லை!! ப‌த்தாத‌த‌ற்க்கு இந்த‌ ரியாலிட்டி ஷோக்க‌ள் வேற‌. என்ன‌ கொடுமை சார்..

***
ச‌ரி நானும் க‌ல‌வை ப‌திவு போட‌ ஆர‌ம்பிச்சிட்டேன்! ஒகே ரைட், ரைட்!

Tuesday, December 22, 2009

பேனாவும் பேப்பரும்..

இருந்தா போதும்..நாமளும் கவிஞர் ஆகிடலாம்.
எப்படின்னு சொல்லுறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்.

நாம பள்ளியில படிக்கும்போது மிஸ் பேச கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆனா க்ளாஸ் ரொம்ப மொக்கையா இருக்கும். வேற வழியில்லாம புத்தகத்தோட கடைசி பக்கத்துல எழுதி தோழிமாரோட பேசிட்டு இருப்போம் இல்லையா? எனக்கு இந்த கிறுக்குற பழக்கம் ரொம்பவே அதிகம். ஆனா ஸ்கூல்ல கடைசி நாலு வருஷம் நான் கொஞ்சம் 'படிக்கனும்'ங்கற 'பொறுப்புணர்ச்சி'யால அப்படி அவ்வளவா எழுதல.


காலேஜ் வந்த பிறகு முதல் வருசம் வெறும் மூணு மணி நேரம்தான் வகுப்புகள்.. அப்போவும் கொஞ்ச ஆர்வக்கோளாருல மேம் சொல்லுறத கவனிச்சிட்டு இருந்தேன். ஆனா கடைசி ரெண்டு வருஷம் முழுக்க படிப்ப தவிர காலேஜ்ல‌ என்ன‌ன்ன‌ ப‌ண்ண‌ முடியுமோ அத்த‌னையும் ப‌ண்ணிட்டு இருந்தேன் (அதாங்க‌, எக்ஸ்ட்ரா க‌ர்ரிகுல‌ர்). அதுவும் ஃபைன‌ல் இய‌ர் சொல்ல‌வே வேண்டாம், என்னை வேற‌ செக‌ர‌ட்ட‌ரியா போட்டு, நான் பெர்மிஷ‌ன் வாங்கி குடுத்தா ம‌த்த‌வ‌ங்க‌ளும் க‌ட்ட‌டிக்கலாம்ங்க‌ற‌ நிலைமை வேற‌.. அப்புற‌ம் என்னாகும், வ‌ருச‌ம் முழுக்க‌ மொத்த‌ம் ஒரே ஒரு நாள்தான் க்ளாஸ்ல‌ இருந்தேன்!


இப்ப‌டி இருந்த‌ புள்ளைய‌ போய் மேல்ப‌டிப்பு ப‌டிக்க‌ சொன்னா என்ன‌ ப‌ண்ணுவா (ஹி,ஹி, யாரும் சொல்ல‌ல‌, நானா எடுத்த‌ முடிவுதான்!). அங்க‌யும் போய் க‌ட்ட‌டிக்க‌லாம்னு நினைச்சிட்டு இருந்த‌ என் நினைப்புல‌ எல்லாம் ம‌ண்!


விடாம‌ தொட‌ர்ந்து நாலு ம‌ணி நேர‌ம் க்ளாஸ் ந‌ட‌க்கும், யாராச்சும் விசிட்டிங் வாத்தியார்க‌ள் வ‌ந்துட்டா போதும், இர‌வு ஒரு ம‌ணிக்கு கூட‌ க்ளாஸ‌ வெச்சு க‌ழுத்த‌றுப்பாங்க‌.  இதுல ஞாயிற்றுக்கிழ‌மை ஆனா போதும், காலைல‌ எட்டுல‌ இருந்து இர‌வு எட்டு வ‌ரைக்கும் ஒரே பாட‌ம் ந‌ட‌க்கும். அப்பல்லாம் எல்லாரும் சீக்கிரமா காலைல சாப்பிட்டுட்டு அவசர அவசரமா முதல் ஆளா க்ளாஸ்க்கு போக பெரும் போட்டியே நடக்கும். ஏன் தெரியுமா? கடைசி வரிசைய புடிக்கிறதுக்கு தான்.

நாங்க‌ எப்ப‌வும் எந்த‌ வ‌ரிசையில‌ உட்கார‌துன்னு ரொம்ப‌ டெக்னிக்கா யோசிப்போம். முத‌ல் வ‌ரிசையும் வேலைக்காவாது, க‌டைசி வ‌ரிசையில‌யும் எப்ப‌வும் வாத்தியாரோட‌ க‌ண்ணு இருக்கும். அத‌னால‌ ந‌டு வ‌ரிசையில‌, சுவ‌ரோர‌மாதான் உட்காருவோம். ஆனா என்ன‌ பிர‌ச்சினைன்னா அது ஏசிக்கு கீழ‌ இருக்குமா, காலைல‌ மெஸ்ல‌ பொங்க‌ல்னா போதும், அப்ப‌டியே துக்க‌ம் க‌ண்ண‌ க‌ட்டும். என்ன‌ ப‌ண்ணுற‌து, எல்லாருக்கும் வாய்க்காத‌ பாக்கிய‌ம் ஒண்ணு என‌க்கு வாய்ச்சிருக்கே, அதாங்க ஸ்கார்ஃப்! அப்ப‌டியே ஒரு ப‌க்க‌ம் க‌ண்ண‌த்துல‌ கையும் இன்னொரு ப‌க்க‌ம் ஸ்கார்ஃப‌ அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிட்டா போதும்! சார் கண்ணுல‌ ப‌டாம‌ தொட‌ர்ந்து ரெண்டு ம‌ணி நேர‌ம் தூங்கிருக்கேன்னா பாத்துக்கோங்க‌ளேன்!


ஒரு ச‌ம‌ய‌ம் அதுவும் வேலைக்காவாது.. தூங்கி மாட்டிக்கிட்டா மான‌ம் போய்டும், அத‌னால‌ ஸ்கூல்ல‌ ப‌ண்ணின‌ மாதிரி க‌டைசி ப‌க்க‌ கிறுக்க‌ல் தான் ந‌ம்மை காப்பாத்தும்.. அப்ப‌டி ஒருக்க‌ கிறுக்குன‌தை ப‌த்திர‌மா வெச்சிருக்கேன், அது உங்க‌ளுக்காக‌, இதொ!!


யாருக்காச்சும் ப‌டிக்க‌ க‌ஷ்ட‌மா இருந்தா, இதோ உங்க‌ளுக்காக‌வே!!


விஜ‌ய் ப‌ட‌ம் பேரு திருப்பாச்சி


அதை பாத்து என‌க்கு ரொம்ப‌ வெருப்பாச்சி


கீர‌ விக்குற‌ ஆயா பேரு மீனாச்சி


க்ளாஸ‌ விடாம‌ எடுக்குற‌வ‌ங்க‌ளுக்கு இல்லையா ம‌ன‌சாட்சி?????


***

ம‌யில் போல‌ பொண்ணு ஒண்ணு


உங்க‌ எல்லார் த‌லையில‌யும் ம‌ண்ணு
****

oligopoly, monopoly ங்க‌றான்,


என‌க்கு தெரிஞ்ச‌தெல்லாம் ம‌சால‌ போளி, கார‌ போளி தான்,


இருந்தாலும் தண்ணீர் எடுக்க‌ உத‌வும் வாளி,


கிண‌த்துல‌ த‌ண்ணி எல்லாம் காலி,


க்ளாஸ் இல்லைன்னு சொன்னா எங்க‌ளுக்கெல்லாம் ஜாலி

*****

Monday, December 21, 2009

கடனும் வட்டியும் அது போடும் குட்டியும்

பரக்கத்!

தமிழை தாய் மொழியாகக்கொண்ட பல முஸ்லிம்கள் பேச்சு வழக்கில் சில அரபி வார்த்தைகளை கலந்து பாவிப்பதுண்டு. ஹயாத்து (வாழ்வு), மவுத்து (இறப்பு), ரிஸ்க் (உணவு), ராஹத்து (இதம்), நஸீப் (இறைவன் விதித்தது) போன்றவைகளுள் ஒன்றுதான் பரக்கத். பரக்கத் என்றால் பலர் நிறைய பண வரவு மட்டுமே என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பரக்கத் என்பது இறைவனின் அருளால் தன்னிறைவு பெறுதல். அதாவது ஒருத்தர் மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சாலும் ரெண்டு லட்சத்துக்கு கிரடிட் கார்டை தேய்ச்சு செலவு செய்கிறவங்களும் இருக்காங்க,அதே போல ஆயிரம் ரூபாயே வருமானம் என்றாலும் அந்த ஆயிரத்துக்குள் குடும்பம் நடத்தி, அதில் கொஞசமாச்சும் மிச்சம் பிடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா?


முன்னெல்லாம் நாம கடனாளியா இருக்கறத யாருமே விரும்ப மாட்டோம். எப்படி நமக்கு ஒரு உடல் உபாதை வரக்கூடாதுன்னு நினைப்போமோ அப்படித்தான் கடனாளியாகவும் ஆகக்கூடாதுன்னு நினைப்பொம் இல்லையா?
ஆனா ஒரு ஏழெட்டு வருஷமா என்ன நடக்குது? உலகமயமாக்கல்ன்ற பேர்ல கோக கோல, பெப்சியோட சேர்ந்து வந்த்து தான் இந்த க்ரெடிட் கார்டும். இரண்டு வருசம் முன்னாடி வரைக்கும் நம்ம நாட்டோட பொருளாதாரம் (அதுலயும் எனக்கு உடன்பாடில்லை. நாட்டோட வளர்ச்சி என்பது எல்லா மக்களையும் சேர்ந்தடையும் சமமான வளர்ச்சியாக இருக்கனுமே ஒழிய ஒரு சாரார் மட்டுமே வளர்ச்சியின் பயன்களை அனுபவிப்பது ஏற்க முடியாது) தாறுமாறா வளருதுன்னு பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கூவிக்கிட்டு இருந்தப்போ பத்துல எட்டு பேருக்காச்சும் சார் தயவு செய்து லோன் வாங்கிக்கோங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு போன் கால்கள் வந்திருக்கும் (அது இப்பவும் தொடரத்தான் செய்யுது). உசாரானவங்க தப்பிச்சிருப்பாங்க. ஆனா பல பேர் "சும்மா வரத ஏன் வேண்டாம்னு சொல்லனும்", "நாம என்ன தேய்க்கவா போறோம், சும்மா வாங்கி வெச்சுப்போமே", "இப்ப‌ வாங்கி வெச்சுட்டா ஏதாச்சும் அவ‌ச‌ர‌த்துக்கு உத‌வும்". பெர்ச‌ன‌ல் லோன் ம‌ற்றும் கார்டை வெச்சிருப்ப‌வ‌ங்க‌ பெரும்பாலும் இந்த‌ கார‌ண‌ங்க‌ள்ல‌ ஏதாச்சும் ஒண்ண தான் சொல்லுவாங்க‌, இல்லையா?

இப்ப‌டி வ‌ரைமுறை இல்லாம‌ க‌ட‌ன் குடுக்குற‌தும், க‌ட‌ன் வாங்குற‌தும் அமெரிக்க‌ க‌லாச்சார‌ம். அங்க‌ சேமிப்புங்க‌ற‌து ஒரு கான்ச‌ப்டே இல்லை, அது த‌னி ம‌னித‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, அர‌சாங்க‌மா இருந்தாலும் ச‌ரி. இன்னும் சொல்ல‌ போனா நாங்க‌ எம்.பி.ஏ வுல‌ ப‌டிச்ச‌ நிதி நிர்வாக‌ம் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ ச‌ப்ஜ‌க்டுக‌ள்ல‌ உள்ள‌ அமெரிக்க‌ன் திய‌ரிஸ்டுக‌ளெல்லாம் க‌ட‌ன் வாங்குற‌தால‌ ஒரு க‌ம்பெனியின் நிக‌ர‌ லாப‌ம் (net profit) கூடும் என்ற‌ எம் & எம் திய‌ரி தான் நாங்க‌ல்லாம் முட்டி மோதி ப‌டிச்சிட்டு இருந்தோம் (சிம்பிளா சொல்ல‌னும்னா, க‌ட‌ன்ல‌ க‌ட்ட‌ வேண்டிய‌ வ‌ட்டி தொகை வ‌ருமான‌ வ‌ரிக்கு உட்ப‌டாது, அத‌னால‌ ஒரு பங்குக்குரிய லாபத்தொகை அதிகமாகுமாம்.. ஏதோ தலையை சுத்தி மூக்கை தொடுவது போல இல்ல?

எப்பவுமே கடன் என்பது ஒரு அவசரத்தேவைக்காக, நம்மிடம் இருப்பது போக வாங்குவதாகத்தான் இருக்கணுமே ஒழிய எளிதா கிடைக்குதேன்னு வாங்கி போடக்கூடாது. இது ஒரு தனி மனிதனுக்கும் மட்டுமல்லாமல் அரசுக்கும், நிறுவனங்களுக்கும் கூட பொருந்தும். உலக பணக்காரர்களில் முதல் இரண்டு இடங்கள்ல இடம் வகிக்கும் வாரன் பஃபெட் கூட அதிகமா கடன் பட்டிருக்கிற நிறுவனங்கள நாட மாட்டாரு.

உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது, ஆனா இஸ்லாத்தை பொறுத்தவரை வட்டி வாங்குவது என்பது கொலைக்குற்றத்துக்கு சமம். வட்டி வாங்குபவர் இறைவனுடனும் நபியுடனும் போர் செய்கிறார் என்றே குரானில் இறைவன் கூறுகிறான்.


ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)


இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)


அப்ப நாம கடன குடுத்துட்டு என்ன செய்றதாம்? அவனுக்கு கடன் குடுக்காம நான் ஒரு தொழிலில் முதலீடு செய்திருந்தாலோ அல்லது ஒரு வீடு கட்டியிருந்தாலோ அது மூலமா எனக்கு வருமானம் வந்திருக்கும். இன்னைக்கு நூறு ரூபாய்க்கு இருக்குற மதிப்பு ஒரு வருஷம் கழிச்சு கண்டிப்பா அதுக்கும் குறைவாதான் இருக்கும் (அதாவது டைம் வேல்யூ ஆஃப் மனி). அப்படி இருக்கும்போது நான் வட்டி கேக்குறது எப்படி அநியாயமாகும்? நான் கடன் கொடுத்ததால இழந்த பணத்தை (ஆப்புர்ட்யூனிட்டி காஸ்ட்) ஈடு செய்யத்தானே கேக்குறேன்? என்ற "நியாயமான" காரணங்களை பலர் எடுத்து வைப்பதை நான் கேட்டிருக்கிறேன். இன்னும் பலர் வட்டின்னா அது மீட்டர் வட்டி, கந்து வட்டி தான், சாதரணமா வங்கிகள் சேமிப்பு மீது கொடுக்கும் வட்டி நியாயமானது தான் என்று கூறுவார்கள்.

நாம‌ முன்ன‌ க‌ட‌ன் எதுக்கு வாங்குறோம்கிற‌ அடிப்ப‌டையை பாத்தோம். இஸ்லாத்துல‌ கட‌ன் கொடுப்ப‌து என்ப‌து த‌ர்ம‌ம் செய்வ‌து போல‌.. க‌ஷ்ட‌த்தில் இருக்கும் ஒருவ‌ருக்கு க‌ட‌ன் கொடுத்து, அவ‌ருக்கு முடியாத‌ ப‌ட்ச‌த்தில‌ அந்த‌ க‌ட‌னை த‌ள்ளுப‌டி செய்வ‌து மிக‌வும் ந‌ன்மைக்குரிய‌ விச‌ய‌மாக‌ க‌ருதப்ப‌டுகிற‌து. அதே போல‌ க‌ட‌ன் வாங்கிய‌வ‌ர் ந‌ல்ல‌ நில‌மையில் இருந்தால் அவ‌ர் வாங்கிய‌தை விட‌ அவ‌ர் இஷ்டத்திற்கு அதை சிற‌ப்பாக‌ திருப்பி கொடுக்க‌லாம். நினைவில் கொள்க‌: க‌ட‌ன் கொடுத்தவ‌ர் அதை ஒருபோதும் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ முடியாது.

எப்படி வட்டியின் மூலம் பணம் சம்பாதிப்பது அனுமதிக்கப்படலயோ அதே போலத்தான் ஸ்பெகுலேசன் எனப்படும் நிச்சயமற்ற தன்மை உடைய வியாபாரத்தில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்படல. ஆனா பங்கு வர்ததகத்தை வர்த்தகத்துல ரொம்ப சாதரணமா நடக்குது- டே ட்ரேடிங்‍: ஒரே நாளில் பங்கை வாங்கி விற்பது, ஆப்ஷன்ஸ்‍‍: இன்னைக்கு ஒரு பங்குகுக்கு ஒரு விலை நிர்ணயம் பண்ணிட்டு அதை ஆறு மாசம் கழிச்சு விலை குறைஞ்சா வாங்குவது எல்லாமே சூதாட்டத்தை போலத்தான். இரண்டு வருசம் முன்ன ஒரே நாளில் சென்செக்ஸ் பல ஆயிரம் புள்ளிகளை தாண்டுவதும், கொஞ்ச நாளைல அது அதல பாதாளத்தை தொடுவதற்க்கு காரணம் இது தான். பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்த விளையாட்டை விளையாட நம்ம நாட்ட பயன்படுத்தியது வேற கதை!

இன்றைய‌ கால‌க்க‌ட்ட‌ங்க‌ள்ல‌ வ‌ட்டியும், ஒண்ணுமில்லாத‌ அடிப்ப‌டையில் பங்கு ச‌ந்தையில் ப‌ண‌ம் ஈட்டுவ‌தும் ஒரு நாட்டுடைய‌ பொருளாதார‌ அடிப்ப‌டையை எந்த‌ அள‌வுக்கு ஆட்டி வைக்குதுன்னு அமெரிக்கா என்னும் ஒரு நாடு மூல‌மாக‌வே பார்க்கிறோம்.
ம‌த்த‌ விஷ‌ய‌ங்க‌ளை போல‌வே ப‌ண‌ விஷ‌ய‌த்திலும் அதிக‌ப‌ட்ச‌ ஒழுக்க‌த்தை க‌டைப்பிடிக்கிற‌து எவ்வ‌ள‌வு ந‌ன்மைங்கிற‌து என‌க்கு ஒரளவுக்கு தெரியுது.. உங்க‌ளுக்கு?

டிஸ்கி: அமெரிக்க பொருளாதரத்தை பத்தி மார்க் ஃபேபர் என்னும் முதலீட்டாளர் என்ன சொல்றார்னு பாக்கனுமா? இதை படிங்க, ரொம்ப சுவையா இருக்கும்!

Thursday, December 17, 2009

கம்மா..

ஒரு வாரமா ஒரே கவலை.. என்னுடைய கம்மாவுக்கு (அம்மாவை பெத்த பாட்டி) பைபாஸ் அறுவை சிகிச்சைன்னு சொன்னவுடன் எனக்கு இங்க கொஞ்சம் கூட ஓடவேயில்லை..எனக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்னு வீட்டுல பேசினப்ப நான் முதல்ல போட்ட கண்டிசன் வெளிநாடு போக மாட்டேன்னு தான்.. ஏர்க்கெனெவே ரெண்டு வருசம் ஹாஸ்டல்ல இருந்து வீட்ட ரொம்ப தேடிட்டேன், இனியும் ம்மா வாப்பாவை விட்டுட்டு இருக்க முடியாது, அப்புறம் முக்கியமா ஊருல நடக்குற நல்லது கெட்டதுக்கு கலந்துக்க முடியாதுங்கறதால அந்த கண்டிசன்.

ஆனா இறைவன் நமக்கு ஒரு நல்ல வாழ்ககையை வெளிநாட்டில் தான் வெச்சிருக்கான் என்றால் நாம் அதை ஏற்றுக்க தானே செய்யனும்னு வந்தாச்சு (அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் லீவு முடிஞ்சு முதல்ல இங்க வந்ததும் எப்படா விசா வரும்னு காத்துட்டு இருந்தது தனி கதை. என் தம்பி கேட்டான் "எப்படி லாத்தா இப்படி தலகீழா மாறிட்ட). கிளம்பும்போதே கம்மாக்கு தாடை வலிக்குதுன்னு சொன்ன உடன் ரொம்ப கவலையா இருந்தது. முதல்ல டாக்ட‌ரை போய் பாருங்க‌ன்னு சொன்னேன்..உங்க‌ எல்லாருக்கும் இத‌ய‌ நோய் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ மின்ன‌ஞ்ச‌ல் வ‌ந்திருக்கும்னு நினைக்குறேன்.. அதுல‌ தெளிவா போட்டிருக்கும், தாடை வ‌லிச்சா அது இத‌ய‌ நோய் அறிகுறியா இருக்கும் என்று. நீங்க‌ளும் உங்க‌ வீட்டுல‌ உள்ள‌ பெரிய‌வ‌ங்க‌கிட்ட‌ சொல்லி வைங்க‌.

க‌ம்மாக்கு அறுவை சிகிச்சை ந‌ல்ல‌படியா முடிஞ்ச‌து, அல்ஹ‌ம்துலில்லாஹ். இப்போ ஐ சி யூவில‌ தான் இருக்காங்க‌. இன்ஷா அல்லாஹ் நாளைக்கோ நாள‌ க‌ழிச்சோ ரூமுக்கு மாத்திடுவாங்க‌.

எங்க‌ ம்மா வீட்டுல‌ நான்தான் முத‌ல் பேத்தி. நான் பிற‌ந்த‌ப்போ ந‌ட‌ந்த க‌தைக‌ளையும், கொஞ்ச‌ம் வ‌ள‌ர்ந்து பேச‌ ஆர‌ம்பிச்ச‌ப்போ நான் ப‌ண்ணின‌ குறும்புக‌ளையும் கொஞ்ச‌ம் கூட‌ ம‌ற‌க்காம‌ல் எங்க‌ க‌ம்மா சொல்லுவாங்க‌.. இன்ன‌னும் சின்ன‌ புள்ளைல‌ என் அள‌வுக்கு எந்த‌ பேத்தியும் பேசின‌தில்லைன்னு சொல்லுவாங்க‌.. (ரைமெஸ் சொல்ல‌ சொன்னா, "ஹாப் அ லிட்டில், ஜ‌ம்ப் அ லிட்டில்" என்று ஆர‌ம்பிச்சி, "ர‌ன் அ லிட்டில்"ன்னு சொல்லி அப்ப‌டியே விளையாட‌ ஓடிடுவேனாம்). ஸ்கூல் ப‌டிக்கும்போது எப்ப‌டா லீவு விடுவாங்க‌ன்னு வெயிட் ப‌ண்ணி க‌ம்மா வீட்டுக்கு போவேன்.. போனா க‌ம்மா சுட்ட‌ முறுக்கு ஒரு பெரிய‌ டின் முழுக்க‌ காத்துட்டு இருக்கும். அந்த ருசி வேறெந்த முறுக்குலயும் வாரதுங்க, உண்மையா.. அங்க‌ என்னை இடுக்கிட்டு ப‌ஜார்க்கு கூட்டிட்டு போவாங்க‌ (அப்ப‌வே ந‌ட‌க்க‌ சோம்ப‌ப்ப‌ட்ட‌ தில்லால‌ங்க‌டி நான்).

என‌க்கு அங்கிருந்து வீட்டுக்கு வ‌ர‌வே புடிக்காது. எரிச்ச‌ப்ப‌ட்டுட்டே தான் கிள‌ம்புவேன்..க‌ம்மாகிட்ட‌ நான் இங்க‌யே இருந்துக்குறேன் க‌ம்மா, இங்குள்ள‌ ஸ்கூல்ல‌யே ப‌டிக்கிறேன்னு சொல்லுவேன்.. நான் தூங்கும்போது என‌க்காக லா இலாஹா இல்லல்லாஹ்வும் தாலாட்டும் பாடுவாங்க. அந்த‌ பாட்டோட‌ வ‌ரிக‌ள் என‌க்கு நினைவில்லன்டாலும் அந்த‌ ராக‌ம் என‌க்கு ந‌ல்ல நினைவிருக்கு.


அதுக்க‌ப்புற‌ம் அவ‌ங்க‌ சென்னை வ‌ந்த‌ பிற‌கும் க‌ம்மா வீட்டுக்கு போற‌துன்டாலே ஜாலிதான்.. ஆனா க‌ல்லூரிக்கு வ‌ந்த‌ பிற‌கு நாட்கண‌க்கில‌ த‌ங்குற‌து குற‌ஞ்சிட்டு..அப்புற‌ம் எம்.பி.ஏ ப‌டிக்க‌ திருச்சி போன‌ பிற‌கு ம்மாவை ரொம்ப‌ தேடி க‌ல்யாண‌ம் வ‌ரைக்கும் அவ‌ங்க‌ள‌ பிரிஞ்சி இருக்க‌ ம‌னமே இல்லை.

இப்பொ க‌ம்மா நினைப்பு ரொம்ப‌ வாட்டுது. அவ‌ங்க‌ளுக்கு முடியாத‌ நேர‌த்துல‌ அவ‌ங்க‌ ப‌க்க‌துல‌ இருக்க‌ முடிய‌ல‌ன்னு நினைக்கும்போது ரொம்ப‌ கஷ்ட‌மா இருக்கு. என்னை எப்ப‌டியெல்லாம் வ‌ள‌ர்த்த‌வ‌ங்க‌ அவ‌ங்க‌ள‌ பாக்க‌ முடிய‌ல‌ன்னு நினைச்சா வ‌ருத்த‌ம் தாங்க‌ முடிய‌ல‌. ச‌ரி என்னாலான‌து என்னுடைய‌ துவா (பிரார்த்த‌னை) ம‌ட்டும்தான். இப்போ என் த‌ம்பி வ‌ந்த‌ப்போ கூட‌ அவ‌ன்கிட்ட‌ அவ‌ங்க‌ செஞ்ச‌ முறுக்கும் இட்லி பொடியும் குடுத்து விட்டுருக்காங்க. என‌க்கு எப்ப‌டா அவ‌ங்க‌ள‌ பாப்போம்னு இருக்கு..

Monday, December 7, 2009

அளவுக்கு மிஞ்சினால்...

மக்களே..எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சே.. என்ன பண்ணுறது? முதலில் வலைத்தளம் ஒண்ணு தொடங்கனும் என்று நினைத்த உடனே, துபை வந்து, செட்டில் ஆனதும் தொடங்கலாம்னு தான் நினைச்சேன்..ஆனா ஆசை யார விட்டுச்சு, ஆர்வக்கோளாறுல ஆரம்பிச்சாச்சு, ஆனா தொடர்ந்து எழுத தான் இயலல.. இன்னைக்கு ஹூசைனம்மா ரொம்ப அன்பா மெயில்ல விசாரிச்சாங்க.. அட, இனிமேலும் எழுதாம இருக்க கூடாதுன்னு வீராப்பா பழயபடி வந்த்தாச்சு..


தக்கடி போட்டதுக்காக எனக்கு விருது கொடுத்து சிறப்பித்த‌ சகோதரர் பித்தனின் வாக்கு அவர்களுக்கும், சகோதரி சாதிகா அவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி (எனக்கு சோடா பாட்டிலும், மைக்கும் நினைவுக்கு வருது..உங்களுக்கு?)

நமக்கு முன்ன பின்ன சொந்தமா சமைச்சு பழக்கமில்லாத்தால, பல நேரங்கள்ல செம்ம சொதப்பல்ஸ் ஆஃப் யு.ஏ.இ ஆகிடுது.. நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.

அப்புறம் நம்ம நண்பர்கள் தொல்லை வேற தாங்க முடியல.. "ஏன்டி, நீதான் துபை வேர்ல்டுக்கு அட்வைஸ் கொடுத்தியா"ன்னு கேட்டு ஒரே தொல்லை..ஆனா துபை வேர்ல்ட விட, அதுக்கு கடன் கொடுத பிரிடிஷ் வங்கிக‌ளுக்கு அட்வைஸ் கொடுத்த‌வ‌ன‌ தான் முத‌ல்ல‌ உதைக்க‌னும்..சாத‌ர‌ண‌மா ஒரு அம்ப‌து ரூபா ஒருத்த‌வ‌ங்க‌ளுக்கு க‌ட‌ன் கொடுக்க‌னும்னாலே ஆயிர‌ம் த‌ட‌வை யோசிக்குற‌ ம‌னுச‌ன், அதெப்ப‌டி ஒரு நிறுவ‌ன‌ம் அர‌சு சார்பான‌துன்னு என்ற ஒரு விசயத்த மட்டும் வெச்சிட்டு, ஆயிர‌ம் ஆயிர‌மா கோடிகளைகொட்டி கொடுக்குறாங்க‌?

துபை வேர்ல்ட்டுக்கும், அத‌னுடைய‌ துணை நிறுவ‌ன‌மான‌ நகீலுக்கும் (அதாங்க‌, க‌ட‌ல்ல‌ பேரிச்ச‌ ம‌ர‌த்த‌ போல‌ தீவுக‌ளை க‌ட்டி, அதுல‌ ஹோடெல்க‌ளும், வீடுக‌ளும் க‌ட்டி விக்குறாங்க‌ளே) க‌ண்ண‌ மூடிட்டு, அதனுடைய‌ ஆடிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை எல்லாம் பார்க்காம‌ எப்ப‌டித்தான் இவ்வ‌ள‌வு கொட்டி கொடுத்தாங்க‌ளோ..

எப்ப‌டியோ, கொஞ்ச‌ நாளைக்கு மீடியாக்க‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி தான்.. எப்ப‌டியும் அவ‌ங்க‌ இன்னும் க‌ட‌ன த‌ர‌ மாட்டேன்னு சொல்ல‌ல, ஆறு மாச‌ம் ஆர‌ப்போட‌த்தான் சொல்லிருக்காங்க‌.. அபு தாபியும் உத‌விக்க‌ர‌ம் நீட்டுது, பாப்போமே, என்ன‌ தான் ந‌ட‌க்க‌ போகுதுன்னு.ஒரு வேளை க‌ட‌ன‌ அடைக்காம‌ விட்டுட்டா, உல‌க‌ அள‌வுல‌ பெருசா பாதிப்பில்லைன்டாலும் இங்க‌ க‌ண்டிப்பா ஒரு க்ரெடிட் க்ரன்ச் (வ‌ங்கிக‌ள் க‌ட‌ன் மூல‌மா இருக்கும் ப‌ண‌ப்புழ‌க்க‌ம்) ந‌ட‌க்கும்னு நான் நினைக்குறேன்..

இவ்வ‌ள‌வு குள‌றுப‌டிக‌ளுக்கும் கார‌ண‌ம், காசு தான் எளிதா கிடைக்குதேன்னு க‌ண்ட‌தையும் செய்ற‌து.. இதை நாம‌ த‌னிப்ப‌ட்ட‌ முறையில‌யும் செய்யுறோம், ஒரு கூட்டா பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செய்யுது..எப்ப‌வுமே ந‌ம்ம‌ தேவைக்கு மீறி எதை செய்தாலும், அதிலும் ஒரு வ‌ரைமுறை இருக்க‌னும்.. காசு இருக்கேன்னு ஊர‌ சுத்த‌லாம், ஆனா க‌ட‌னுக்கு வாங்கி சுத்த‌னுமா என்ன‌? இது ஒரு இட‌த்தோட‌ இருக்காது, ரிப்பிள் எஃப்க்ட் என‌ சொல்ல‌ப்ப‌டும் அது சார்ந்த‌ அதிர்வுக‌ள‌ ஏர்ப‌டுத்திட்டே தான் இருக்கும்..
க‌ட‌னை ப‌ற்றியும், வ‌ட்டியை ப‌ற்றியும், வியாபார‌த்தை ப‌ற்றியும் இஸ்லாம் என்ன‌ சொல்லுத்துன்னு பார்த்தா ரொம்ப‌ ஆச்ச‌ர்ய‌மா இருக்கு..ஒரு நிதி நிர்வாக‌ துறையை சேர்ந்த‌ என‌க்கு புரிஞ்ச‌த‌ கூடிய‌ சீக்கிர‌ம் உங்க‌ளிட‌மும் ப‌கிர்ந்துக்க‌றேன்..