Thursday, November 26, 2009

ஐ! இன்னொரு விருது!!

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சே.. மேட்டர் என்னன்னா, எனக்கு கூகிள பயன்படுத்தியே பழக்கமாயிட்டதால மற்ற தமிழ் எழுதிகளை பயன்படுத்துறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..அன்பு சகோதரிகள் ஜலீலாவும் ஹுஸைனம்மாவும் சொன்ன தமிழ் எடிட்டரை வைத்து தான் எழுதுறேன்..

முதல்ல எனக்கு விருது குடுத்த சகோதரி மேனகாவுக்கு ஒரு பெரிய சைஸ் நன்றி.. ஹி ஹி.. என்னோட மொக்கைக்கும் விருது குடுக்குறாங்கன்னா அது ரொம்ப பெரிய விஷயம்.. ரொம்ப நன்றி, சகோதரி!! :)




‍‍‍‍‍‍நாளைக்கு இன்ஷா அல்லாஹ் பெருநாள்...இன்னைக்கு அரஃபாத் நோன்பு.. அவுங்களுக்கு இன்னைக்கும் ஆஃபீஸ்.தனியாத்தான் நோன்பு திறக்கனும்.. ஹ்ம்ம்ம்..இப்ப வீட்டு நினைப்பு ரொம்ப வாட்டுது..வீட்டுல பெருநாள் வந்துட்டாலே,முதல்ல துணி, மணியெல்லாம் வேங்கிட்டு, அவசர அவசரமா தைக்க குடுத்துட்டு, அத வேங்க போகும்போது மருதாணி வேங்கிட்டு, வீட்டுக்கு வந்தா சாச்சிமார் எல்லாருக்கும் மருதாணி விட்டுட்டு, கதை பேசிட்டே இருக்கும்போது தூக்கம் கண்ண கட்டும், ஆனா தூங்க மனசு வராது..


சென்னையில எங்க வீடு இருக்குற இடம் நல்ல கல, கலன்னு இருக்கும். நல்ல மார்கெட் ஏரியா..பெருநாளப்போ தெருவே களை கட்டிடும்.. எங்க வீட்டுல இருந்து கூடுதலா ஃப்ளட் லைட்டெல்லாம் போடுவாங்க.. அதை பார்க்கவே அழகா இருக்கும்.. நானும் என் தம்பியும் இன்னும் சாச்சா புள்ளைங்க்ளும் சேர்ந்து மொட்டை மாடிக்கும் வீட்டுக்குமா அலைஞ்சிட்டு இருப்போம்..ம்மா, சாச்சிமார், வாப்சா எல்லாரும் முற்றத்துல உட்கார்ந்து இஞ்சி, பூண்டு உரிச்சிட்டு இருப்பாங்க.. மேல மாடியில பிரியாணி ஆக்க ஆட்க்ள் எல்லாம் வந்துகிட்டு இருப்பாங்க.. அப்போ அந்த சட்டிய பார்க்கவே ஆசையா இருக்கும்.. கொஞ்ச‌ம் நேர‌ஞ்சென்டு போனா, ஸ்வீட் செஞ்த‌ த‌ருவாங்க‌.. ஹ்ம்ம்ம்..
என‌க்கு பெருநாள் அன்னைக்கு செய்ற‌ பிரியாணிய‌ விட‌, காலைல‌ ப‌சியாற‌ செய்யும் இட்லி, க‌றி உருளைக்கிழ‌ங்கு ஆன‌ம், வ‌ட்ட‌ல‌ப்ப‌ம், பாயாச‌ம் தான் புடிக்குமே.. பெருநாள் தொழுகை முடிஞ்ச‌தும் ந‌ல்லா ஒரு புடி, புடிக்க‌லாம்..கையில‌ ம‌ருதாணி வாச‌த்தோட‌ சாப்ட்ற‌தே ஒரு த‌னி சுக‌ம் தான்.. :)

ஹ்ம்ம்...ச‌ரி ரொம்ப‌ சென்டியாகிட்டேன்.. ப‌ர‌வால்ல‌. இங்க‌ பெருநாள் கொண்டாட‌ அவுங்க சொந்த‌ கார‌வ‌ங்க‌ வீட்டுக்கு போறோம், இன்ஷா அல்லாஹ்.. :) க‌ல்யாண‌ம் முடிஞ்ச‌துக்கு அப்புற‌ம் இது தான் முத‌ல் பெருநாள்.. :) ஆவ‌லுட‌ன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..



எல்லாருக்கும் ஹ‌ஜ்ஜு பெருநாள் ந‌ல்வாழ்த்துக்கள்.. இறைவ‌னின் அருட்கொடையை எண்ணி, அவ‌னுக்கு ந‌ன்றி செலுத்தி, சிற‌ப்பாக‌ கொண்டாடுவோம்..

Friday, November 13, 2009

ஒரு விருது, ஒரு தட்டு தக்கடி



நம்ம ஜலீலா லாத்தா ஒரு விருது குடுத்துருக்காங்க.. அபப்டியே புல்லரிச்சு போயிட்டேன்.. பின்ன நாம எழுதுற மொக்கைக்கு அவார்டெல்லாம் குடுக்குராங்கப்பன்னு தான்.. இருந்தாலும் ரொம்ப உற்சாகமா இருக்கு.... நன்றி லாத்தா..
எங்க ஊரு பக்கம் (அதான் நெல்லை சீமை- அருவாக்கும் அல்வாக்கும் பெயர் பெற்ற ஊரு!) பல உணவு பண்டங்கள் அரிசிய வெச்சு செய்வாங்க.. நிறைய பேருக்கு முஸ்லிமுன்னு சொன்னாலே பிரியாணி தான் நினைவுக்கு வரும்.. ஆனா சத்யமா எங்க வீட்டுல பிரியாணி செய்ய தெரிஞ்சவங்கள விரல் விட்டு எண்ணிடலாம்... எங்கும்மாக்கு சுத்தமா வரவே செய்யாது.. என் தம்பி சொல்லுவான் "ம்மா, நீ எது வேணும்னாலும் செய், ஆனா டிவி ல கண்டதையும் பாத்துட்டு பிரியாணி மட்டும் செய்யாதம்ம்மா"... அந்த அளவுக்கு தான் பிரியாணி.. ஆனா என்ன, பெருநாள், கல்யாண நேரங்கள்ல வெளிய ஆள் வெச்சு ஆக்கிட வேண்டியது தான்.. :)

நெய்சோறு, கரி ஆனம், வட்டலப்பம், இடியப்பம், ஆப்பம், புட்டு, அரிசிமா ரொட்டி, தக்கடி, வெள்ளை கஞ்சி இதெல்லாம் எங்க ஊர்ல ரொம்ப விசேஷம். .. எனக்கிதுல பிடிச்சது தக்கடி..

டைப் பண்ணும்போதே வாய் ஊறுதுங்க.. எனக்கு அவ்வளவு புடிக்கும்... ஆனா கொஞ்சம் செயற்முறை கஷ்டமா இருக்குற மாதிரி இருக்கும்.. என்கும்மா எது செஞ்சாலும் ரொம்ப எளிதா செஞ்சிடுவாங்க.. அதுல ஒன்னு தான் இந்த சாப்பாடும்..
நான் செஞ்ச தக்கடி:




செய்முறை (யப்பா... கடைசில நானும் சமையல் பதிவெல்லாம் போடுறேன் பா!)

தேவையான பொருட்கள்:

தக்கடிக்கு

- தேங்காய் துருவி போட்ட அரிசி மாவு- இரண்டு கப்

-பொடியாக அறிந்த வெங்காயம் சிறிதளவு

-பச்சை மிளகாய் சிறிதளவு

-உப்பு, தேவைக்கேற்ப

லேசா சுடுதண்ணிய தெளிச்சு சின்ன சின்னதா கொழுக்கட்டை புடிச்சி வெச்சுக்கோங்க.

ஆனத்திற்கு:

-இரண்டு தக்காளி

-மூன்று அல்லது நான்கு பெரிய வெங்காயம்

-பச்சை மிளகாய் சிறிதளவு (நறுக்கியது)

-இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு

-மிளகாய், மல்லி, உப்பு தூள்- தேவையான அளவு

-ஆட்டிறைச்சி அரை கிலோ

எண்ணெய் காய்ஞ்சதும் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு அது வதங்கியதும் தக்காளியை சேத்துக்கோங்க.. அதுல எல்லா மசாலா தூளையும், உப்பையும் போட்டு, நல்ல வதங்குன பிறகு கறிய போட்டு நல்ல தண்ணி ஊத்தி குக்கரை மூடி, அஞ்சு விசில் வர வரைக்கும் வைங்க..

குக்கரை திறந்து, கறி வெந்துட்டான்னு பாத்துக்கோங்க. ஆனம் கொஞ்சம் தண்ணியா இருக்கணும்.. அதுல ஒவ்வொன்னா புடிச்சு வெச்ச தக்கடிய போடுங்க.. ஆனம் அதுல நல்லா இறங்கினதும் அப்படியே கெட்டியாகிடும்.. ஐயோ எனக்கு வாய் ஊறுதுங்க.. நான் எஸ்கேப்

Saturday, November 7, 2009

அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்..

அதாவது என்னன்னா, மேடம் இப்பல்லாம் ரொம்ப பிஸி மாதிரி.. இல்லத்தரசி இல்லையா? சமைக்கணும் இல்லையா? எல்லாரும் கேக்குறாங்க 'how was your cooking experience?' அப்படின்னு.. எனக்கு தானே தெரியும் அது experience இல்லை, experiment என்று! ஹிஹி... பாவம் எங்க வீட்டுல உள்ளவங்கதான்.. போன வாரம் ஒரு சொதப்பல் ரசம் வெச்சு அவங்களுக்கு கட்டி குடுத்துட்டேன்... பாவம் அவங்க அலுவலகத்துல கிட்டத்தட்ட மானம் போய்ட்டாம் (ஆனா பாருங்க, ரசம் மட்டும் தான் சொதப்பல், மத்த இதெல்லாம் நல்லா தான் செய்றேன்னு சொன்னாங்களாக்கும் ;) )

துபைக்கு கெளம்பறேன்னு எல்லார்கிட்டயும் பயணம் சொல்லும்போது, சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் கேட்ட கேள்வி: "துபாய் ல எங்க, மெயின் ரோட்டுக்கு பக்கத்துலயா? பஸ் ஸ்டாண்ட ஒட்டியா?". இங்க வந்ததுல இருந்து துபாய் பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்குன்னு பாக்க ரொம்ப ஆவலா இருந்தது, நேத்துதான் காண கிடைச்சுது.. நேத்து தெரிஞ்சவங்க ஒருத்தவங்க வீட்டுக்கு ஷார்ஜாவுக்கு போனோம், அங்க அவங்க வீடு உண்மையாவே கொஞ்சம் பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோடு (அதாங்க அந்த பெரிய பிரிட்ஜ்) பக்கத்துல தான் இருந்துச்சு! :)

துபாய்  வந்து சேர்ந்த உடன கண்ணை ஸ்கேன் பண்ண வரிசைல நிண்டுட்டு இருந்தேன்... அரபிகாரங்களை தொலைக்காட்சியில பார்த்தாலும் நேர்ல பாக்குறது அது தான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்.. அவங்க தலைல இருந்த அந்த கருப்பு வட்டத்தை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டுல இருக்குற கலவடை நினைவுக்கு வந்துட்டு (அதான் அடுப்புல இருந்து இறக்கி வைக்க ஒரு ரிங் இருக்குமே, அது).. உடனே அவர் தலைல ஒரு சட்டிய வைச்சா எப்படி இருக்கும்னு நினைச்சிட்டு இருக்கும்போதே என் முறை வந்துட்டு.. போனா 'ஆங்கொன் , தேகோ' ன்னு  ஏதோ ஹிந்தியில சொல்றார்.. நமக்கு தான் ஹிந்தி வரதே, நான் சொன்னேன், 'i don't understand hindi', அப்புறம் அவர் கேட்டார் 'you're from India, you don't know Hindi?', அடுக்கு நான் 'no, I speak Tamil' அப்படின்னு சொன்னேன். அடுத்த கேள்வி தான் காமெடியே, அவரு "then what language you know" அப்படின்னு கேட்டப்போ எனக்கு வந்துச்சு பாருங்க, மனசுக்குள்ள "அடப்பாவி மனுசா, இவ்வளவு நேரம் எதுல பேசிட்டு இருந்தேனாம்னு நினைச்சிட்டே, English please" ன்னு சொல்லி தப்பிச்சேன்!

சரி இங்க உள்ள அரபி பொண்ணுங்களுக்கும் தலை ரொம்ப வித்தியாசமா தான் இருக்குதுங்க.. ஆமா... தலைல ஏதோ ஸ்டாண்ட் அடிச்சு அதை சுத்தி துணிய போட்டுருக்குற மாதிரி இருக்கு... அது தான் இப்ப பேஷன் போல... ரொம்ப இருக்கமா உடை அணிஞ்சிட்டு பேருக்கு சும்மா தலைல துணிய சுத்தி இருக்காங்க.. என்னமோ... மேலை நாடுகள்ல ஹிஜாபை கடைபிடிக்க சாலைல வந்து போராட வேண்டி இருக்கு... இங்கு இவ்வளவு சுதந்திரம் இருந்தும் இப்படி இருக்குறாங்க.. அவங்க எங்க, இவங்க எங்க!

அல்லாஹ் தான் எல்லா மக்களையும் காப்பாத்தனும்..

Wednesday, November 4, 2009

பிடித்தவர்/பிடிக்காதவர்

ஒரு வழியா துபாய் வந்து சேர்ந்தாச்சு.. தனியா சமைக்கவும் பழகியாச்சு (சரி, சரி..என்ன செய்ய, எங்க வீட்ல உள்ளவங்க தல விதி அவ்வளவு தான்).. இப்ப பிரியாணி கடையையும் திறந்தாச்சு..

பீர் அண்ணே தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.. ரொம்ப நன்றி! ஹிஹி.. சரி ரொம்ப பேசாம விஷயத்துக்கு வாரேன்:

1. அரசியல் தலைவர்


பிடித்தவர்: ஜெயலலிதா

பிடிக்காதவர்: கலைஞர் (ஆட்டோ வருமோன்னு பயம்மா இருக்கு பா)

2. எழுத்தாளர்

பிடித்தவர்: கல்கி (பொன்னியின் செல்வன்!!!!!)

பிடிக்காதவர்: மதன்

3. கவிஞர்

பிடித்தவர்: தாமரை

பிடிக்காதவர்: பா. விஜய்  (கேவலமான
 குத்து பாடல்களுக்காக)

4. திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்: பாண்டியராஜன் (ஆண் பாவம் ஒரு படம் போதும்)

பிடிக்காதவர்: கே. பாலசந்தர்

5. நடிகர்/கை

பிடித்தவர்: பத்மினி 

பிடிக்காதவர்: விஜய் 

6. விளையாட்டு வீரர்

பிடித்தவர்: விசுவநாதன் ஆனந்த்

பிடிக்காதவர்: ஜோஷ்னா சின்னப்பா

7. தொழில் அதிபர்

பிடித்தவர்: சாந்தி துரைசாமி ( சக்தி மசாலா)

பிடிக்காதவர்: ராஜகோபால் (சரவணபவன்)

கேள்வின்னு வந்தாலே எல்லாமே மறந்து போகுது.. விளையாட்டின் விதிகள் இங்கே.

நான் அழைக்க விரும்புவது:
 
1. விக்னேஸ்வரி 
2. அன்புடன் மலிக்கா