Monday, September 17, 2012

அவதூறை எதிர்கொள்ள..

பிற்சேர்க்கை:  http://muslimmatters.org/2012/09/16/39567/ ஆங்கிலத்தில் வெளிவந்த இக்கட்டுரையைக்கொண்டே இதை நான் எழுதினேன்.

மீண்டும் ஒரு முறை நமது அருமை நபி முஹம்மது ஸல் அவர்களைப்பற்றின அவதூறை கிளப்பும் ஒரு விஷயம் உலகம் முழுக்க வாழும் நம் சகோதரர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரத்தி நானூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து, ஒன்றுமே இல்லாத ஒரு பூமியில் ஒரு மிகப்பெரிய புரட்சியை வெறும் இருபது ஆண்டுகளில் ஏற்படுத்திய  அந்த மாமனிதர் செய்த ஒவ்வொரு செயலையும் நபிவழியென இன்றளவிலும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் மக்கள், அவரை தன்னுடைய தாய், தகப்பனை விட மேலான ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். அப்பேர்பட்ட நம் நபி ஸல் அவர்களை சிறிதளவு இழிவாக பேசினாலும் நம்மால் தாங்க முடியாது தான். ஆனால் நபிவழியை வாழ்வின் எல்லா கட்டங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நாம் இத்தகைய அவதூறை சந்திக்கும்போதும் அதே அளவு கடைப்பிடிக்கிறோமா?

நபி ஸல் அவர்களுடைய வாழ்க்கையில், எத்தனையோ அவதூறுகளையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களை மன்னித்தும் இருக்கிறார்கள். இஸ்லாம் பரவ தொடங்கிய கால்த்திலிருந்தே இத்தகைய அவதூறுகளும் ஏளனங்களும் அவர்களை சூழ்ந்து தான் இருந்திருக்கிறது . ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களை அல்லாஹ்விடம் விட்டுவிடுவிடுவதேசாலச்சிறந்தது , ஏனெனில்


15:95உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.நபி ஸல் அவர்களை ஏளனம் செய்பவர்களை அல்லாஹ்வே பொறுப்பெடுத்துக்கொள்ளும்போது மனிதர்களாகிய நாம் தெருவில் இறங்கி, அமெரிக்க கொடியை எரித்து, கலவரம் உண்டாக்கி தேவையில்லாத உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுத்தி எதை சாதிக்க போகிறோம்?

சூரா அல் பகறாவில் ஏளனம் செய்வது அறிவீனர்களின் செயல் என மூஸா அலைஹிவஸல்லம் கூறுகிறார்கள்

2:67இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.7:199. எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

அறிவீனர்களை அலட்சியம் செய்யுமாறு குர் ஆன் நமக்கு கட்டளையிட்ட பின்னும் அத்தகைய அறிவீனர்களிடம் நாம் ஏன் விவாதித்துக்கொண்டிருக்க வேண்டும்? குறிப்பாக பதிவர்களாகிய நாம் நிச்சயமாக நம்முடைய பொன்னான நேரத்தை இத்தகையோரிடம் வீணடிக்க வேண்டாமே!!

25:63இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.


இஸ்லாம் மிக மிக எளிமையான ஒரு மார்க்கம். நாம் தான் அதை தேவையில்லாமல் கடினமாக்கிக்கொண்டிருக்கிறோம். அப்படி குர் ஆனிலும்  ஹதீஸிலும் இல்லாத வேறு எந்த முறையை கடைப்பிடித்தாலும் நாம் வெற்றியடைய போவதில்லை. அதனால் எதற்கு  இந்த தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும்? இதனால் யாருக்கு என்ன பயன்? இப்படிபட்ட ஆர்ப்பாட்டங்களில், அது எவ்வளவு அமைதியான முறையில் நடைப்பெற்றாலும் அது நிச்சயமாக கலவரங்களை பரப்பக்கூடியவை. இப்படிபட்ட கலவரங்களில் அநியாயமாக கொல்லப்படும் அப்பாவி மக்களா அந்த படத்தை எடுத்தார்கள்? அவர்களுக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? 

செய்திகளில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை காண்பிக்கும்போது ஒரு பெண்மணி சிரித்துக்கொண்டே கோஷம் எழுப்பினார். நிச்சயமாக இதைவிட வேதனைக்குரிய விஷயம் வேறெதுவும் இல்லை. 

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள் பாதி பேர் யாரும் தாடி வைத்தவர்களாக தெரியவில்லை. நபி ஸல் அவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் அன்பை இப்படி வீதியில் வந்து காட்ட வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. நம் வாழ்வில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய நபிவழியை பேணாமல் அவர்கள் மீது எவ்வாறு அன்பு வைக்க முடியும்? முதலில் நம்மை நாமே நபி ஸல் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அதிகமளவு படித்து, அவர்களுடைய வழிமுறைகளை நம் வாழ்விலும் கடைப்படிக்க வேண்டும். இதை எனக்கும் ஒரு படிப்பினையாக்கிக்கொள்கிறேன். அல்லாஹ் நம் அனைவரையும் மரணிக்கும் வரையில் அவன் ஒருவனை வணங்கி, அவனுக்கே அடிமையாக தவிற வேறெந்த நிலையிலும் மரணிக்காமல் இருக்க உதவி புரிவானாக. ஆமீன். Tuesday, March 20, 2012


இந்த தடவை கண்டிப்பா ஹூசைனம்மாக்கிட்ட இடுகை எழுதிட்டு தான் பேசுவேன்னு சபதத்தோட தான் இருக்கேன். சாதரணமா எல்லா ரைட்டர்ஸுக்கும் இருக்குற ரைட்டர்ஸ் ப்லாக் எனக்கு இரண்டு வருஷமாவே இருக்கு. சே!! ரொம்ப டூ மச் தான் இல்ல?

இவ்வளவு நாள் எழுதாம இருந்தும் என்னை இன்னும் நினைவில் வெச்சிருக்கும் என் அன்பு சகோதரிகளுக்கு (மைக், சோடா பாட்டில் நினைவுக்கு வருதா?)‍‍ நன்றி, நன்றி, நன்றி. என்னுடைய தக்கடி குறிப்பை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய ஸாதிகா அக்காவிற்கு நன்றி, நன்றி நன்றி!

அப்புறம், இப்பல்லாம் பின்னூட்டம் இட நேரம் இருக்குறதில்ல. ஆனா எல்லார் பதிவையும் படிக்க தவறுவதில்லை. இப்ப முழு நேர குடும்ப தலைவி(!!) ஆகிட்டதாலயும், தனியா சமாளிக்கவும் ரொம்பவே உறுதுணையா இருப்பது நம்ம இணையம் தான். என்ன சந்தேகம்னாலும் ம்மாகிட்ட கேட்டுட்டு ஒரு வாட்டி நெட்லயும் பார்ப்பது தான் வழக்கமாயிட்டு. பிள்ளைக்கு சளி வந்து கஷ்டப்பட்டு இருந்தப்ப, ம்மா இஞ்சி தட்டி கொடுக்க சொன்னாங்க. ஆனா செய்முறை விளக்கத்தோட பிள்ளைக்கு சளி பிடிச்சா என்ன செய்யன்னு அவ்வளவு விரிவா எழுதின ஜலீலா அக்காவுக்கு நான் பின்னூட்டமிடலானும் அவ்வளவு துவா செஞ்சேன்!!

அப்புறம், இந்த உலக மக்களுக்கு நான் சொல்லிக்கிறது என்னன்னா, கடைசில நானும் சூப்பரா பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன். அட ஆமாங்க, நம்புங்க. அடுத்த வாட்டி கட்டாயம் ஃபோட்டோவோட ஆதாரம் கொடுக்குறேன், ஒகே! அதுக்கு காரணம் நம்ம சகோதரி ஆசியா தான். அவங்களோட பரங்கிப்பேட்டை பிரியாணி ரெசிபி இப்ப எங்க வீட்டுல நல்ல ஃபேமஸ்! உங்களுக்கும் என்னுடைய நன்றி ப்ளஸ் துவாக்கள் அக்கா!

‍‍‍....

சரியா நாலு வருஷம் முன்னாடி  பெண்கள் தினம் அன்னைக்கு என்னுடைய மேலாண்மை கல்லூரி தோழிகள் எல்லாரும் கடற்கரையில் சந்திச்சோம். அப்பத்தான் படிப்பு முடிஞ்சு, எல்லாரும் அவரவர் வேலையில செட்டில் ஆகியிருந்தோம். அப்ப ஒருத்தருக்கொருத்தரி விசாரிக்கும்போது,வர்க் ப்ரெஷர், கல்யாணம்னு பல டாபிக் ஓடிட்டு இருந்துச்சு. இப்ப கூட படிச்ச தோழியர் பலருக்கு திருமணம் ஆகிடுச்சு, அதுல பல பேர் க்ளாஸ்மேட், இல்லன்னா சீனியர் பசங்களோட காதல் திருமணமும் அடக்கம்.

படிப்பு முடிக்கும்போதே பல லட்சங்கள் சம்பளத்தோட வேலை, ஈசி லோன் மூலமா வீடு, கார்னு எம்பிஏ படிச்ச ஒரு வருஷத்துல லைஃப் ஸ்டைலே எல்லாருக்கும் மாறி இருந்தது. நீளமான, சுருட்டைமுடி சர்ண்யா இப்ப செம்ம ட்ரெண்டியா ஸ்ட்ரைட் ஆக்கிட்டு, ஆளே மாறி இருந்தா. அதுபோல தான் எல்லாருக்கும், ஏதோ ஒரு மாற்றம். இப்பல்லாம் ஆஃபிஸ் பார்ட்டிகள்ல 'ட்ரிங்க்ஸ்' செர்வ் பண்றத பத்தி யாரும் பெருசா எடுத்துக்குறதில்ல. அதோட பெரிய ஷாக் என்னனா, ஃபேஸ்புக்கில சாதரணமா கையில மதுக்கோப்பைகளோட போஸ் தராங்க. காலேஜுக்கு வரும்போது துப்பட்டாவை பின் பண்ணி வந்தவங்கள்ளாம் கேஷுவலா ஷார்ட் ஸ்கர்ட் போட்டுட்டு போஸ் குடுக்குறாங்க. .

இப்படி நடை, உடை, செயற்க்கையான ஆங்கில ஆக்ஸென்ட்னு பல விஷயங்கள் மாறினாலும் என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்யும் விஷயம், இப்ப நம்ம நாட்டில கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சிட்டு இருக்கும் விஷயம், டின்க் எனப்படும் "டபுள் இன் கம், நோ கிட்ஸ்" தான். நான் இதை முதன் முறையா ஒரு மேகசின்ல படிச்சப்போ, எங்கயோ நடக்குற விஷயம்னு தான் நினைச்சேன். ஆனா இப்பல்லாம் என்னை சுத்தி நிறைய பேர் இருகாங்கன்னு புரியுது. அதாவது என்னன்னா, திருமணம் ஆனாலும் குழந்தைகளே வேண்டாம்னு இருக்குறவங்களுக்கு பேரு தான் இந்த டின்க் தம்பதிகள். குழந்தைபேறு, அதுக்குன்னு செலவழிக்கிறது, சொத்து சேக்குறது, முக்கியமா அந்த பொறுப்பு தலையில சுமப்பதை தேவையில்லைன்னு நினைக்கிற கான்சப்ட் தான் இது.

ஏற்கெனெவே 'பெண்ணின் திருமண வயது 21" என்று ஆட்டோவில எழுதின காலமெல்லாம் மலையேறி போய், இப்ப 25‍ ல இருந்து 27 வயசில தான் கல்யாணமே பண்ணிக்கிறாங்க. இதுல பிள்ளைபேறையும் தள்ளி போடுறது, இல்லை ஒரேடியா வேண்டாம்னு ஒதுக்குறதும் ஃபேஷனாவே ஆகிட்டு.

எப்ப திருமணம் பண்ணலாம், எப்ப குழந்தை பெறலாம், என்ன உடை அணியலாம், இதெல்லாமே ஒவ்வொருத்தரோட உரிமை. நிச்சயமா அதை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லை. ஆனா அது ஒரு ட்ரென்ட் மாதிரி மாறிட்டு வருவது கண்ணுக்கே தெரியாம நம்முடைய சமூகத்தை பின்னாளில் பெரிதாக தாக்கலாம். எப்படின்னா, ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். அமீரகத்துல 95% குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளை வளர்க்க நேன்னிஸ் அல்லது ஆயாக்களை நியமிச்சிடுறாங்க. பெத்தவங்க வேலைக்கும், இன்னும் ரொம்ப பணக்கார பெத்தவங்க மத்த கேளிக்கைகளுக்கும் போறதுனால இந்த குழந்தைகள்  காசுக்காக மட்டுமே உழைக்கும் வேலையாட்களிடம் வளர்வதால் அவங்க்ளோட ஆரோக்கியம், உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, மன முதிர்ச்சி, இது எல்லாமே பாதிக்கப்படுது. இது மட்டுமில்லாம பெத்தவங்க கவனிப்பு இல்லாத பிள்ளைங்க பொதுவாகவே ரொம்ப ரிபெல்லியஸா, எதுக்கும் அடங்காதவங்களா இருக்காங்க.

இப்படிப்பட்ட பசங்க படிக்கிற பள்ளிகள்ல தான் நம்ம பிள்ளைகளும் படிப்பாங்க, அது போல அவங்களோட தாக்கம் கண்டிப்பா நம்ம பிள்ளைகள் கிட்டயும் கட்டாயம் தெரியும். என்னதான் நாம கண்டிப்போட இருந்தாலும், இது தான் ஃபேஷன், இது தான் ஐடியல் வேர்ல்ட் என்று ஒரு மாயையை க்ரியேட் பண்ணி, நம்ம பிள்ளைகளும் அதை பின்பற்ற தொடங்கிடுவாங்க.

அது போல பிள்ளை பேறை வேண்டாம் என்று ஒதுக்கிய மேற்க்கத்திய நாடுகள்ல இப்ப இருக்குற பெரிய பிரச்சினை‍ ஏஜிங்க் பாபுலேஷன். அதாவது, மக்கள் தொகையில் இளைஞர்களை விட வயசானவங்க அதிகமாகிட்டே போறது. அப்படி இருக்கும் ஒரு சூழல்ல, புதிய கண்டுபிடிப்புககள், வளர்ச்சி, வேலை வாய்ப்புன்னு எல்லாமே பாதிப்புக்குள்ளாவுது.  கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஒரு ஊருல எல்லாருமே தாத்தா பாட்டிங்களாவே இருந்தா அந்த ஊரு எப்படி இருக்கும்னு?


இப்போதைக்கு இந்த பிரச்சினை பெரும்பாலும் ஐரோப்பாவில் அதிகமா இருக்கு. பின்லாந்து நாட்டில இது பத்தின ஒரு ஆராய்ச்சியில என்ன சொல்லிருக்காங்கன்னு பாருங்க:


"At the beginning of the twenty-first century the Finnish society is characterised by increasing individualisation, as well as a fragmentation of social values, life choices and identities. Concurrently, traditions and consistent social norms are losing importance. This applies also for the ageing process, which is far more individual today than ever before."


இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டின் துவக்கதில இருந்து அதிக அளவில் மனிதர்கள் ஒரு கூட்டாக, சமூகமாக வாழ்வதை தவிர்த்து, தனியாக வாழ ஆரம்பித்ததன் விளைவாக சமூக கட்டுபாடுகள் உடைந்து போயின. ஒரு குடும்பம் என்றால் அதில் தலைவன், தலைவி, பிள்ளைகள், அவர்களின் தாத்தா பாட்டி என்றும், அப்படி பல குடும்பங்கள் ஒன்றாக இருப்பது தான் ஒரு சமூகம் என்ற விஷயமே போற போக்க பார்த்தா இல்லாம போயிடும் போல.  இப்ப மேலை நாடுகள்ல இருக்கும் பழக்கங்கள் இந்தியாவிலும் வேகமா பரவிட்டு இருக்கு. பிள்ளைகள் வேண்டாம்னு சொல்றது, இருபதுகளின் இறுதிகளில் இருந்தாலும் "பிள்ளைகளை பார்த்துக்குற மன முதிர்ச்சி எங்களுக்கு இன்னும் வரலை" "come on, i am too young for that", "i don't think i can handle that responsibility" போன்ற வாசகங்கள் கேக்குறது வாடிக்கையாயிட்டு. 

தனி மனித சுதந்திரம், என் இஷ்டப்படி தான் எல்லாமே செய்வேன், என்னை யாரும் கேள்வி கேக்க கூடாது என்ற எண்ணங்கள் இப்போ நம்ம இளைய சமுதாயத்திடம் அதிகமா பரவிக்கொண்டிருக்கு.  கொஞ்சம் யோசிச்சு பார்த்தா தெரியும், மனிதன் எதற்கும் அடிபணியாம அவன் இஷ்டத்துக்கு போய்க்கொண்டிருந்தால் அதோட விளைவுகள் இந்த சமுதாயத்துக்கு எவ்வளவு பாதிப்பை உண்டு பண்ணும் என்று. Tuesday, October 18, 2011

தமிழ்மணத்திற்கு என்னுடைய கண்டனங்களை பதிவு செய்கிறேன்இஸ்லாமியர்களான நாங்கள் சொல்லும் அழகிய முகமனை போகிற போக்கில் கேவலப்படுத்தி இருக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவருக்கும், அதை கண்டும் காணாமல் இருந்தது மட்டுமல்லாது, மிகவும் பொறுப்பற்ற நிலையில் திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கும் தமிழ்மணம் குழுவிற்கும் என்னுடைய கண்டனங்களை பதிவு செய்கிறேன்.


அது மட்டுமல்லாது, இத்தனை பேர் பயன்படுத்தும் ஒரு தளத்தின் நிர்வாகி தரம்தாழ்ந்த பின்னூட்டங்களின் மூலம் பிறரையும் தனி மனித தாக்குதல் நடத்தி இருப்பதும் மிக மிக கேவலமானது, அருவருக்கத்தக்கது.

உங்கள் திரட்டியால் எங்களை போன்ற பதிவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை, உங்களுடைய அவதூறு எங்கள் மார்க்கத்தின் சிறப்பை ஒரு இம்மியளவும் குறைக்கப்போவது இல்லை.  


*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*

உங்கள் அனைவரின் மீதும் எல்லாம் வல்லா அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!
Wednesday, February 2, 2011

பிரியாணி சட்டி 02.02.2011

ஹலோ எவிரிபடி! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சு... :) நிறைய சோம்பலும், கொஞ்சம் வேலைகளும் இருந்ததால பிரியாணி சட்டிய திறக்க கேப் விட்டுடுச்சு..

***
இறைவன் அருளால் ஒரு பாஸ்போர்ட்டோட ஊருக்கு போயி, இரண்டு பாஸ்போர்ட்டோட வந்து சேர்ந்தாச்சு. (வந்து சேர்ந்து மூணு மாசம் ஆவுது-எல்லாம் ஒரு சோம்பல் தான்) குட்டியோடவே இப்ப நேரம் சரியா இருக்கு. வயித்து புள்ளையோட எங்க வேணும்னாலும் போகலாம், கைப்புள்ளையோட பக்கத்துல போகக்கூட கஷ்டம்னு பெரியவங்க சொன்னது சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்ல, காலேஜுல, ஏன் ஆஃபீஸ் ல கூட அப்பப்பா டகால்டி வேலை செஞ்சு கட் அடிக்கலாம், ஆனா நம்ம ஜூனியர் கிட்ட ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. நானும் பையன் அவங்க வாப்பா மாதிரி சமர்த்தா வரனும்னு துவா கேட்டுட்டே இருந்தேன்.. ஆனா பாக்கத்தான் வாப்பா மாதிரி, ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ம்மா மாதிரின்னு மாப்பு சொல்றாங்கப்பா!

***

இங்க என் சமையல சகிக்காம காய்ஞ்சு போயி, அங்க வீட்டுக்கு போனா, அங்க‌யும் போய் ரொம்ப‌ ஃபீல் ப‌ண்ணினேன். எங்க‌ மாப்புக்காக‌.. பின்ன‌, இத்த‌னை நாளா இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமேன்னு தான்.
***

ஊருக்கு போற‌துக்கு ஜாலியா இருந்தாலும் க‌ர்ப்ப‌மா இருக்கும்போது எல்லாரும் ப‌ய‌ப்ப‌டுற‌து அட்வைஸுக்கு தான். நின்டா, ந‌ட‌ந்தா, உட்கார்ந்தா, தூங்கினா, எல்லாத்துக்கும் ஒரு மெத்ட‌லாஜி வெச்சிருப்பாங்க. பல விஷயங்களில் நமக்கு நன்மை இருந்தாலும் ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌ம்ம‌ளால‌ ப‌ண்ண‌வே முடியாது. உதார‌ண‌த்துக்கு தூங்கும்போது திரும்பி ப‌டுக்க‌னும் என்றால் எந்திச்சு உட்கார்ந்து தான் ப‌டுக்க‌னுமாம். இல்ல‌ன்டா புள்ளை குட‌லை சுத்திக்குமாம். இப்ப‌டி யாராச்சும் அட்வைஸ் ப‌ண்ணினா, நான், ஆமாமா, அப்ப‌டித்தான் செய்றேன்னு சொல்லிடுவேன். வேற‌ வ‌ழியில்லையே!
***


என்ன்ன தான் நம்ம மெட்ராஸ், நம்ம சென்னைன்னு வாய்கிழிய சப்போர்ட் பண்ணினாலும், ஒரு விஷயத்துல நம்ம ஊரு பயங்கரமா அடி வாங்கும். அது கூவாருன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. அது நம்ம ஊரு ஆட்டோ டிரைவர்கள் தாங்க. சே! ஒரு பக்கம் அநியாய கொள்ளைன்னா, இன்னொரு பக்கம் பொறுப்பில்லாம ஓட்டுறது.  எப்ப ஆட்டோவில ஏறினாலும், வயிதுமேல கைய வெச்சிட்டு, கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க சார்ன்னு சொல்லிட்டே தான் ஏறுவேன். ஆனா கேட்டா தானே? ஒரு தடவை ஸ்பென்சர் சிக்னல் கிட்ட, மெயின் ரோடுல இருந்து அப்படியே சர்வீஸ் லேனுக்கு ஒரு ஆட்டோவை எதிட்டாருன்னா பாத்துக்கோங்க. இப்ப நினைச்சாலும் கடுப்பா இருக்கு. ஆனா பாருங்க, டாக்டர் குறிச்ச பிரசவ நாள் தாண்டியும் புள்ளை வெளிய வர மாற்றுக்குன்னு தெரிஞ்சதும் ஆட்டோவுல இன்னும் நல்லா ரவுண்டு அடிக்கலாம்னு தோணிச்சி.. ஹிஹி..

***

எப்படியோ, நல்லபடியா எங்களுக்கு ஒரு குட்டிபாப்பா வந்துட்டான்.. அல்ஹம்துலில்லாஹ்.. சார் தூங்குற டைம் தான் நம்ம வேலைய பாக்க முடியும்.. அதான் உங்களை எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்!


Saturday, May 15, 2010

முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்!

சகோதரி சந்தனமுல்லை அவர்கள் முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா என்று ஒரு இடுகையெழுதி அதைப்பற்றி என்னுடைய கருத்தையும் (நம்மளையும் மதிச்சு!!) எழுத சொல்லிருந்தாங்க. நானே எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா எப்பவும் போல என்னுடைய சோம்பல் முடக்கிட்டு. இப்ப நல்லவேளை சகோதரி எழுத சொன்னாங்க. அதனால, சுடச்சுட இந்த பதிவு.


**
முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி சல் அவர்களைப்போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்க‌ள் விஷ‌ய‌த்தில் பார‌ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌க்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.

ச‌ரி, விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். தாருல் உலூம் என்ற‌ இஸ்லாமிய‌ அமைப்பு, கொஞ்ச‌ நாள் முன்ன‌ 'முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்வ‌து ஹ‌ராம்' அப்ப‌டின்னு ஒரு ஃப‌த்வா சொன்ன‌தாக‌ எங்க‌ பார்த்தாலும் செய்தி ப‌ர‌வி கிட‌ந்த‌து. முஸ்லிம் பெண்கள் ப‌டிப்ப‌தோ, வேலைக்கு செல்வ‌தோ எந்த‌ இட‌த்துல‌யும் ஹ‌ராம் என்று சொல்ல‌ப்ப‌டாத‌போது எப்ப‌டி இப்ப‌டி ஒரு ஃப‌த்வா வ‌ந்துச்சுன்னு ஒரே குழ‌ப்ப‌ம். பிற‌கு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்க‌ளின் கைங்க‌ரிய‌ம் தான். ச‌மீப‌மாக‌ வ‌ந்த‌ செய்திக‌ளில் அப்ப‌டி ஒரு 'ஃப‌த்வாவை சொல்ல‌வில்லை, பெண்க‌ள் வேலை செய்யுமிட‌த்தில் பேண வேண்டிய‌ ஹிஜாபை ப‌ற்றித்தான் சொல்லிருந்தோம்' என்று ம‌றுப்பு தெரிவிச்சிருக்காங்க‌.


**

ச‌ரி. இப்ப‌ முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா? செல்ல‌க்கூடாதா? இஸ்லாம் இதைப்ப‌த்தி என்ன‌ சொல்லுது?


ஒருத்த‌ர் முஸ்லிம் என்று சொன்னால் அவ‌ர் எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்த‌வ‌ராவார். ஆங்கில‌த்துல‌ சொல்ல‌னும்னா 'டோட்ட‌ல் ச‌ப்மிஷ‌ன் டு அல்லாஹ்'. இதில் ந‌ம்ம‌ வாழ்க்கையோட‌ ஒவ்வொரு செய‌ல்க‌ளுமே இறைவ‌ண‌க்க‌ம் தான். காலையில‌ தூங்கி எழுவ‌திலிருந்து, இர‌வு தூங்க‌ செல்லும் வரை பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போன நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை எப்படி ஒழுங்கோட‌ செய்வ‌துன்னு இஸ்லாத்தில் ந‌ம‌க்கு க‌ட்டளை/அறிவுரை இருக்கு. வெளிய‌ இருந்து பார்க்கும்போது இது ரொம்ப‌ பிற்போக்குத்த‌ன‌மா தெரிய‌லாம். ஆனா 1400 வருஷ‌ங்க‌ளாக‌ இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) அவ‌ர்க‌ளை பின்ப‌ற்றுவ‌தில் இன்றிருக்கும் கோடிக்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ளுக்கு எந்த‌ சிர‌ம‌மும் இல்லை.


அப்ப‌டி, ஆண்க‌ள், பெண்க‌ள் என‌ சேர்த்தியாக‌வும், த‌னித்த‌னியாக‌வும் ம‌னித‌ர்க‌ளுக்கு ப‌ல‌ க‌ட்டுபாடுக‌ள் இஸ்லாத்தில் இருக்கு.


ஒரு குடும்ப‌ம் என்றால், அதில் தாய்‍,த‌க‌ப்பனுக்கும், பிள்ளைக‌ளுக்கும் ப‌ல‌ கட‌மைக‌ள் இருக்கு. இஸ்லாத்தில் என்ன‌தான் ம‌னைவி ப‌ண‌க்காரியாக‌ இருந்தாலும், ச‌ம்பாதிப்ப‌வ‌ளாக‌ இருந்தாலும், குடும்ப‌த்தின் ப‌ராம‌ரிப்புக்கு ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டுமே இருக்கு. ம‌னைவி தான் ச‌ம்பாதிக்கிறாளேன்னு க‌ண‌வ‌ன் ஜாலியா இருக்க‌ முடியாது. அதே போல‌, ம‌னைவி ச‌ம்பாதிப்ப‌தில் அவ‌ள் குடும்ப‌த்திற்கு செல‌வு செய்ய‌ க‌ட‌மை இல்லை.
அதாவ‌து, ஒரு குடும்ப‌த்தில‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் ச‌ம்பாதிச்சாலும், ம‌னைவிக்கு குடும்ப‌த்துக்காக‌ செல‌வு செய்ய‌னும்கிற‌ அவ‌சிய‌மே இல்லை. அப்ப‌டிக்க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ க‌ண‌வ‌னுக்கோ, இல்லை அவ‌ள் த‌க‌ப்ப‌னுக்கோ, பிள்ளைக‌ளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.

இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை இருக்கும்போதே நாம‌ தெரிஞ்சுக்க‌லாம், பெண்க‌ள் வேலைக்கு போவ‌தையும், ச‌ம்பாதிப்ப‌தையும் இஸ்லாம் எந்த‌ வித‌த்திலும் த‌டுக்க‌வில்லை. இன்னும் சொல்ல‌ப்போனா இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை தான் எனக்கு க‌ண்டிப்பா ச‌ம்பாதிக்க‌னும்கிற‌ ஆசைய‌ தூண்டிச்சே. பின்ன‌, நாம‌ ச‌ம்பாதிச்ச‌த‌ ந‌ம்ம‌ இஷ்ட‌ப்ப‌டி செல‌வு செய்ய‌லாம்தானே? (ஆனா அதை நேர்வ‌ழியில் செல‌வு செய்வ‌து முக்கிய‌ம். ஏன்னா அதைத்தந்த‌ இறைவ‌னுக்கு நான் ப‌தில் சொல்ல‌னுமில்லையா?)

ச‌ரி, அப்ப‌ ஏன் பெண்க‌ள் வேலைக்கு போற‌த‌ ப‌த்தி எந்த‌ வித‌ க‌ட்டுப்பாடும் இல்லையா? இருக்கு. எப்ப‌டி ஒரு ஆணுக்கு குடும்ப‌த்திற்க்காக‌ ச‌ம்பாதிப்ப‌து க‌டைம‌யோ, அதே போல‌ ஒரு பெண்ணுக்கு குடும்ப‌த்தை பார்த்துக்கொள்வ‌து கட‌மையாகிற‌து. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலம்.

உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன்.வேலை செய்யும் இட‌த்திலும் க‌ண்டிப்பாக‌ ஹிஜாபை பேண‌ வேண்டும். நான் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூக்க‌ளுக்கு போகும்போது ப‌ல‌ர் என்னிட‌ம் கேட்ட‌து, 'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌.அடுத்த‌தா, அள‌வுக்க‌திக‌மான‌ சோஷிய‌லைசிங் இருக்க‌க்கூடாது. ஆண்க‌ளிட‌ம் பேசும்போது ந‌ம்முடைய‌ பேச்சு வெறும் வேலையை ப‌ற்றி ம‌ட்டும் இருக்க‌ வேண்டுமே ஒழிய‌ வீண் அர‌ட்டைக‌ளுக்கு நோ. நான் என் அலுவ‌ல‌க‌த்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் என‌க்கு வ‌ர‌ விருப்ப‌மில்லை என்று சொன்னேன். என்னை ம‌தித்தார்க‌ள். :)

அதோட‌ ரொம்ப‌ முக்கிய‌ம், ந‌ம்முடைய‌ க‌டமையான‌ தொழுகையையும் பேண‌ அனும‌திக்க‌னும். இது ஆண்க‌ளுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்ப‌து கொஞ்சம் ஓவ‌ர் தான். இருந்தாலும் ச‌மாளிப்ப‌து ந‌ம்முடைய‌ க‌ட‌மை. ஒரு நாளைக்கு எத்த‌னையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிட‌ங்க‌ள் தொழுவ‌த‌ற்கு எடுப்ப‌து ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை


என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன்.


இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷ‌த்தில் இது ந‌ட‌ந்திருக்கு.
ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி சல் அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.

வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பாதி பங்கு இருக்குங்கோவ்!), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.

Tuesday, May 4, 2010

அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி

...அப்படி எதுவும் ஆரம்பிக்கலைங்க.. சும்மாத்தான் எல்லாரும் சந்திச்சோமே. சகோதரி ஸாதிகாவின் அமீரக விஜயத்தை ஒட்டி (பில்ட் அப் எப்பூடி) ஏற்பாடு செஞ்ச சந்திப்பு. எல்லாரும் சந்திப்போமான்னு ஹூசைனம்மா கேட்டவுடனேயே எனக்கு ஒரே சந்தோஷமா இருந்தது. எப்படியும் எல்லாரையும் பார்த்துடனும்னு எங்க மாப்பியை நச்சரிச்சு, ரெடியாகி கிளம்பி போனோம்.


நிறைய பேர் பதிவுகள்ல பார்த்துருக்கேன். வலையுலகம் மூலமா கிடைக்கும் நல்ல விஷயம்னு சொல்ல சொன்னால், எல்லாரும் ஒட்டுமொத்தமா சொல்வது இங்கு கிடைக்கும் நல்ல நட்புக்களைத்தான்! நானும் ஆச்சரியப்படுவேன், அதெப்படி முகம் தெரியாத ஒருத்தவங்களோட சட்டுன்னு பழக முடியும்னு. ஆனா முத‌ல் ச‌ந்திப்பிலேயே நீண்ட‌ நாள் ப‌ழ‌கின‌ தோழிக‌ள் போல‌ எல்லாரும் க‌ல‌க‌ல‌வென்று இருந்த‌து என‌க்கு இன்னும் ம‌லைப்பா இருக்கு.


வீட்டை விட்டு கிளம்பும்போதே நல்லா பசி.. இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நைசா மாப்புக்கிட்ட அடி போட்டுட்டு எஸ்கேப். நானும் நினைச்சேன், என்ன ஒரு அரை மணி நேரம்தான் எல்லாரும் பார்த்துக்குவோம்னு. லுலுவில் ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா! ஜலீலாக்காவும் வந்த பிறகு பேசிட்டு அப்படியே பார்க்குக்கு நடை போட்டோம்.. உள்ள காலத்தான் எடுத்து வைக்கிறேன், ஸாதிகாக்கா 'ஆ பிரியாணி சட்டி'ன்னு ஜோரா ஒரு வரவேற்பு குடுத்தாங்க. அப்படியே மலீக்காக்கா எல்லாரையும் அறிமுகப்படுத்த, மலீக்காக்காவை பார்த்து நீங்க யாருன்னு கேக்க, ஹிஹி.. ஆஸியாக்காவோட சமையல் பக்கம் போயி நான் முதல் நாள் செஞ்ச சுருட்டு கறி எங்க மாப்பிக்கு ரொம்ப பிடிச்சிட்டு..

ஜ‌லீலாக்கா கொண்டுட்டு வ‌ந்த‌ சூப்ப‌ர் ம‌சால் வ‌டைய‌ முத‌ல்ல‌ போணி ப‌ண்ணின‌து நானே! ம‌லீக்காகா டூடுல்ஸ் (கோதுமை தோசைக்குள்ள‌ நூடுல்ஸ் ஸ்ட‌ஃபிங்க்‍: பேரு வெச்சிட்டோம்ல‌) சூப்ப‌ரா இருந்துச்சு.. ந‌ல்ல‌ ப‌சி வேற‌, செம்மையா சாப்பிட்டேன்! ஹிஹி...

ச‌கோத‌ரிக‌ள் ஸாதிகா, ஹூசைன‌ம்மா, ஜ‌லீலா, ம‌லீக்கா, ம‌ல‌ர், ஆஸியா இவ‌ங்க‌ளையெல்லாம் முத‌ல்ல‌யே தெரிஞ்சாலும், ச‌ந்திப்பின் மூல‌மா அறிமுக‌மான‌ ச‌கோத‌ரிக‌ள் ம‌னோ ம‌ற்றும் அந‌ன்யாவை ச‌ந்திச்ச‌தில் ரொம்ப‌ சந்தோஷ‌ம். ச‌கோத‌ரி ம‌னோ அவ‌ங்க‌கிட்ட‌ ச‌ரியா பேச‌ முடிய‌ல‌. ஆனா ஜ‌லீலாக்கா சொன்னாங்க‌, அவ‌ங்க‌ ரொம்ப‌ அருமையா எழுதுவாங்க‌ன்னு. பிற‌கு தான் போயி பார்த்தேன்! அந‌ன்யாவின் கொஞ்சும் த‌மிழ் ரொம்ப‌வே ந‌ல்லா இருந்த‌து.. மலீக்காவின் மகன் மஃரூஃப் அப்படியே அம்மா சாடை.. ஜலீலாக்கவின் மகன் ஹனீஃபும் அப்படியே. மாஷா அல்லாஹ்.. பொறுமையான பிள்ளைகள். நேரம் ஆனதும் மாப்பு பார்க்குக்கு வந்துட்டாங்க, அப்படியே கிளம்புறேன்னு சொன்னதும், ஜலீலாக்கா எனக்குன்னு தனியா எடுத்து வெச்ச முர்தபாவும் மலீக்காகாவோட அன்பு பரிசாக எனக்கே பிடிச்ச பிங்க் கலர் பர்ஸும் தந்து அசத்திட்டாங்க.

நான் வீட்ட‌ பொறுத்த‌ வ‌ரைக்கும் பெரிய‌ சோம்பேறி. ம்மா வீட்டுல‌ இருந்தா ஒரு வேலையும் செய்ய‌ மாட்டேன், அதுவும் கிச்ச‌ன் ப‌க்க‌மெல்லாம் ந‌ல்ல வாச‌னை வ‌ரும்போது எல்லாருக்கும் முன்னாடியே ம்மா செஞ்ச‌தை ஆட்டைய‌ போட‌த்தான் போகுற‌து. அப்ப‌டி இருக்கும்போது க‌ல்யாண‌ம் ஆகி இங்க தனியா வந்த‌ பிற‌கு எப்ப‌டித்தான் ச‌மாளிக்க‌ப்போறேனோன்ற‌ கவ‌லை இருந்த‌து.

இங்க‌ வ‌ந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைக‌ளையும் பார்த்துட்டு, அட்ட‌காச‌மா ச‌மைய‌லும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போக‌லைன்டாலும் க‌விதைக‌ள், அருமையான‌ க‌ட்டுரைக‌ள், யோசிக்க‌ வைக்கும் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை த‌ங்க‌ள் அனுப‌வ‌ம் மூல‌ம் ப‌கிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்த‌ப்போ என‌க்கு அவ‌ங்க‌ல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷ‌னாக‌வே தெரிஞ்சாங்க‌. உண்மையா.

அங்க‌ ச‌ந்திச்ச‌வ‌ங்க‌ள்ல‌ நான்தான் இளைய‌வ‌. இன்னும் பெருசா பொறுப்புக‌ள் எதுவும் வ‌ர‌லை. சாத‌ர‌ண‌மா செய்ய‌க்கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளையே செய்ய‌ ச‌டையும் ஆளு நான். ஆனா இவ‌ங்க‌ல்லாம் நான் ம‌லை போல‌ நினைக்கும் ப‌ல‌ வேலைக‌ளை சாத‌ர‌ண‌மாக‌ செய்ய‌க்கூடிய‌வ‌ங்க‌. எல்லாரும் நினைப்ப‌து போல‌ ஒரு பெண் ச‌மைய‌ல் செய்வ‌தும், பிள்ளைக‌ளைக‌ளையும், க‌ண‌வ‌ரையும், அவ‌ர் குடும்ப‌த்தையும், த‌ன் குடும்ப‌த்தையும் பார்த்துக்கொள்வ‌து சாத‌ர‌ண‌ விஷ‌ய‌ம் கிடையாது.


பெண்க‌ள் நாங்க‌ல்லாம் சேர்ந்து ச‌ந்திச்ச‌தில் எல்லாருக்கும் ச‌ந்தோஷ‌ம்னா, என‌க்கு அதுக்கூட‌வே ந‌ல்ல‌ ப‌டிப்பினையும். ஒவ்வொருத்த‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்தும் க‌த்துக்க‌ நிறைய‌ விஷ‌ய‌ம் இருக்கு. உங்க‌ எல்லாரையும் மீண்டும் ச‌ந்திக்க‌ ஆவ‌லா இருக்கேன், இன்ஷா அல்லாஹ்!

Tuesday, April 13, 2010

ஈமான் என்னும் இறைநம்பிக்கை!

அட, தொடர்ந்து மூணாவது பதிவும் தீபா அவர்களின் அழைப்பால்!! ஹிஹி..


***

கொஞ்சம் சீரியஸாக, என்னுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பத்தி எழுதனும்.. நான் பதினாலு வருஷமும் படிச்சது முஸ்லிம்களால் நடத்தப்படும் பெண்கள் பள்ளியில், என் பிறந்த வீடும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தான்.. ஆனா எங்க வீட்டுல மட்டும் ஒரு ஸ்பெஷல்.. கீழ் விட்டில் வட இந்தியர்களும், முதல் மாடியில் கேரளத்தை சேர்ந்தவங்களும் இருந்தாங்க.. மார்வாடிகளோட அதிகம் பழக்கமில்லைன்டாலும் கேரளாக்காரங்களோட எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது.. அந்த அங்கிளும் ஆன்ட்டியும் எங்கும்மா மேல உயிரா இருப்பாங்க.. ஆனா என் வயசில யாருமே இல்லை.. அதனால விளையாட்டெல்லாம் தம்பி, மாமி, சாச்சாமார் மக்களோடத்தான்..


ப‌ள்ளியில‌யும் இர‌ண்டு, மூன்று மாண‌விக‌ளைத்த‌விற‌ மாற்று ம‌தத்தை சேர்ந்த‌வ‌ங்க‌ கிடையாது.. இப்ப‌டி இருந்த‌ என‌க்கு எங்க‌ க‌ம்மா (பாட்டி) வீடு ஒரு த‌னி உல‌க‌ம்.. அவ‌ங்க‌ அப்போ பொன்னேரியில‌ இருந்தாங்க‌.. அங்க‌ ஒரு கால‌னி மாதிரி இட‌ம்... அங்க‌ நாங்க‌ ம‌ட்டும்தான் முஸ்லிம்.. இதுல‌ காமெடி என்ன‌ன்னா, என் பேரே பாதி பேரு வாய்ல‌ நுழையாது.. என்னை சின்ன‌ வ‌ய‌சிலேயே பாய‌ம்மான்னு கூப்டு கிண்ட‌ல் பண்ணுவாங்க‌.. ஹிஹி..


அங்க‌ ஒரு பாம்பு புத்து இருந்த‌து.. அதை சுத்தி சுவ‌ர் எழுப்பி அதை ஒரு வ‌ழிபாட்டு த‌ல‌ம் மாதிரி க‌ட்டியிருந்தாங்க.. நாங்க‌ வாண்டுக‌ள்லாம் அங்க‌ தான் போயி விளையாடுவோமே.. முக்கிய‌மா சொப்பு சாமான் விளையாட‌ ஏத்த‌ இட‌ம் அது தான்.. ஒரு போதும் எங்க‌ க‌ம்மாவோ, எங்கும்மாவோ அங்க‌ல்லாம் போக‌க்கூடாதுன்னு என்னை த‌டுத்த‌தும் இல்ல‌, என்னை அங்க‌ சேர்த்துக்க‌ கூடாதுன்னு ம‌த்த‌வ‌ங்க‌ யாரும் சொன்ன‌தும் இல்லை.. என்ன‌, அவ‌ங்க‌ அந்த‌ புத்தை கும்பிடுவாங்க‌, நாம‌ அதை செய்ய‌க்கூடாதுங்குற‌து ம‌ட்டும் என‌க்கு தெரிஞ்சிது.

அதே கால‌னியில‌ தான் முத‌ன் முத‌ல்ல‌ என‌க்கு கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அறிமுக‌மும் கிடைச்ச‌து.. அங்க‌ கிறிஸ்தும‌ஸ் அப்போ ம‌ர‌த்தை அழகா அல‌ங்க‌ரிச்சுருப்பாங்க‌..எங்க‌ வ‌ய‌சு பிள்ளைங்க‌ யாரும் அங்க‌ இல்ல‌ன்டா கூட சும்மாவாச்சும் நாங்க‌ல்லாம் அவ‌ங்க‌ வீட்டுக்கு போவோம்..
இப்ப‌டித்தான் மாற்று ம‌த‌த்த‌வ‌ர்க‌ளைப் ப‌த்தின‌ விவ‌ர‌ம் என‌க்கு சின்ன‌ வ‌ய‌சில‌ தெரிஞ்ச‌து... எங்க‌ வீட்ட‌ பொறுத்த‌வ‌ரைக்கும் முஸ்லிம்க‌ள்னா ஆண்க‌ள் தொப்பி போடுவாங்க‌, பெண்கள் த‌லையில‌யும் சீலை போடுவாங்க‌, பெருநாள் கொண்டாடுவோம் (அப்ப‌மும் என்ன‌, பெருநா காசும் பிரியாணியும் தான்), க‌ல்யாண‌ம் இல்ல‌ க‌டை திற‌க்க‌னும்னா ஃபாத்தியா ஓதுவாங்க‌.. அவ்வ‌ள்வு தான்..

எங்க‌ க‌ம்மா (அம்மாவின் அம்மா) வீட்டுல‌ தொழுகை எல்லாம் பார்க்க‌ முடியும்.. ஆனா அவ‌ங்க‌ளும் ச‌ரியான‌ த‌ர்கா பார்ட்டி.. அதாவ‌து ஒரு ம‌னித‌ரின் அட‌க்கஸ்த‌ல‌த்துக்கு ப‌ச்சை போர்வை போட்டு அங்க‌ ஒரு தாத்தா ம‌யிலிற‌குல‌ செஞ்ச‌ துடைப்ப‌த்தால‌ ந‌ம்ம‌ முக‌த்த பெருக்கி விடுவாரு.. அதுக்கு பேரு தான் த‌ர்கா.. வெள்ளிக்கிழ‌மையானா த‌வ‌றாம‌ எங்க‌ க‌ம்மா என்னை அங்க‌ கூட்டிட்டு போயிடுவாங்க‌.. நானும் அங்க‌ இருக்குற‌ குட்டி குட்டி த‌வ‌ளைங்க‌ள‌ பாக்க‌ ஆசையா போவேன்.. (கூட‌வே பூந்திக்காக‌வும்.. ஹிஹி).. ஆனா இதெல்லாம் தவறுங்கறது கொஞ்ச லேட்டாதான் தெரிஞ்சது..

அந்த‌ வ‌ய‌ச‌ பொறுத்த‌ வ‌ரைக்கும் நாம‌ அல்லாஹ் ஒருவ‌னைத்தான் வ‌ண‌ங்க‌ வேண்டும் என்ப‌து எப்ப‌டியோ ஓர‌ள‌வுக்கு எங்க‌ ப‌ள்ளியில‌ சொல்லிக்கொடுத்த‌ வ‌ரைக்கும் தெரியும்... அது போல மாற்று மத நண்பர்கள் "உங்க அல்லாஹ் எப்படி இருப்பாரு"ன்னு கேட்டா "அல்லாஹ்வை நாம பாக்க முடியாது, ஒரு நபி (மூஸா/மோசஸ்) அல்லாஹ்வை பாக்கனும்னு கேட்டப்போ அல்லாஹ்வோடைய ஒளி மட்டும் பட்டு ஒரு மலையே தூள் தூள் ஆயிடுச்சாம்" ங்கற அளவுக்கு தான் தெரியும்..


நான் ஆறாவ‌து ப‌டிக்கும்போது எக்ஸ்க‌ர்ஷ‌னுக்கு போக‌னும், திங்க‌ எதாச்சும் வாங்கி குடுங்க‌ வாப்பான்னு கேட்ட‌ப்போ என்னை வெளிய‌ கூட்டிட்டு போனாங்க‌.. போகும்போது வாப்பா, "நாம யார‌ வ‌ண‌ங்க‌னும்?" அப்ப‌டின்னு கேட்டாங்க‌.. நானும் "அல்லாஹ்வைத்தான் வ‌ண‌ங்க‌னும்"னு சொன்னேன்.. "அப்போ, அந்த‌ த‌ர்காவில‌ யாரோ ஒரு ம‌னித‌ரைத்தானே அட‌க்க‌ம் செஞ்சிருக்கு, அப்ப‌ ஏன் அதுகிட்ட‌ போயி என‌க்கு அது செய், இது செய்னு கேக்குறீங்க‌"ன்னு வாப்பா கேட்ட‌தும் தான் நான் யோச‌னை ப‌ண்ணினேன்..

அதே கேள்விய‌ எங்க‌ க‌ம்மாகிட்ட‌ கேட்ட‌ப்போ அவ‌ங்க‌ என‌க்கு ச‌ரியா ப‌தில் சொல்லலை.. எப்ப‌டியோ இறைவ‌ன் அருளால் இஸ்லாமிய‌ க‌ல்வி மூல‌மா இஸ்லாத்தில் இடைத்த‌ர‌க‌ர்க‌ள் கிடைய‌வே கிடையாது, இறைவ‌னுக்கு இணை வைத்த‌ல் மிக‌ப்பெரிய‌ பாவ‌ம்னு விள‌ங்கிய‌து...

குரானை அர‌பியில சரியான உச்சரிப்போட‌ ஓத‌வும், ஓர‌ள‌வுக்கு இஸ்லாத்தை ப‌த்தியும் தெரிஞ்சுக்க‌ என் ப‌ள்ளி மிக‌வும் உத‌விய‌து... அது போல‌ ப‌ள்ளி இறுதி நாட்க‌ள்ல‌ நானே குரானை த‌மிழாக்க‌த்தோடு ப‌டிக்க‌த்தொட‌ங்கினேன்.. அப்ப‌த்தான் தெரிஞ்ச‌து, எவ்வ‌ள‌வு பெரிய‌ அற்புத‌த்தை ந‌ம்ம‌ கையில‌ வெச்சிருக்கொம்னு..

க‌ல்லூரிக்கு போன‌தும்தான் "ஆமா, நீ ஏன் இந்த‌ முக்காடு போடுற‌"ன்னு ஒவ்வொருத்த‌ரா கேக்க‌ ஆர‌ம்பிச்சாங்க‌.. ஒரு சில‌ர் ஒரு மாதிரி இர‌க்க‌த்தோடும் ஒரு சில‌ர் கிண்ட‌லாக‌வும் கேப்பாங்க‌..

என்னுடைய‌ இறைந‌ம்பிக்கையும், இஸ்லாத்தை ப‌த்தின‌ அறிவும் வ‌ள‌ர‌ ஆர‌ம்பிச்ச‌து இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பிச்ச பிறகு தான்.. மேலாண்மை படிக்கும்போது அங்குள்ள‌ விடுதி மெஸ்ல‌ போடுற‌ கோழிக்க‌றி ஹ‌லால் கிடையாது, அதனால‌ அங்க‌ நான் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வெஜிடேரிய‌ன்.. ந‌ண்ப‌ர்க‌ளெல்லாம் ஏன்னு கேக்குற‌ப்போ, ஹ‌லால்னா என்னன்னு விளக்குவேன்.. அதே மாதிரி ஏதாச்சும் நல்ல உடை போட்டுட்டு, வெளிய கிளம்பும்போது நான் துப்பட்டாவைக்கொண்டு முழுசா மறைச்சதும் 'ஏன்டி, இவ்வளவு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு இப்படி மறைக்கிற'ன்னு கேப்பாங்க.. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு ஒவ்வொரு தடவையும் விளக்கனும்.. ஹிஹி...அதே போல நான் நிதி நிர்வாகவியல்ல (அதாம்பா ஃபைனான்ஸ்) சேர்ந்ததும் வட்டி என்பது இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவங்களில் ஒன்று, அதற்கு மாற்றாக இஸ்லாமிய வங்கிமுறை பத்தி மத்தவங்களுக்கு விளக்க அதை பத்தி படிச்சேன்.. 'அதெப்படி வட்டி இல்லாம வியாபாரம் சாத்தியம்'ன்னு கேக்குறவங்களுக்கு விளக்கவே இன்னும் நிறைய இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சிகிட்டேன்...

இப்ப‌டி நேர‌டியா கேள்வி கேட்ட‌வ‌ங்க‌ ஒரு ப‌க்க‌ம்னா, வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இஸ்லாத்தை ப‌த்திய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ப‌டிச்சு அதை தெளிவு ப‌டுத்திக்க‌ நான் இஸ்லாத்தை இன்னும் அதிக‌மா க‌த்துக்கிட்டேன்..


இப்ப‌டி இறைந‌ம்பிக்கை என்ப‌து இறைவ‌ன் ஒருவ‌னேங்குற‌ கோட்பாடுல‌ தொட‌ங்கி, நாம் வாழும் வ‌ழிமுறைக‌ள் இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி ச‌ல் அவ‌ர்க‌ள் வாழ்ந்த்த‌ அடிப்ப‌டையில் என்ப‌து வ‌ரைக்கும் என்னுடைய‌ ந‌ம்பிக்கை ஆழ‌மா வ‌ள‌ர்ந்துட்டே இருக்கு.. பொறுமையும், மன்னிக்கும் மனமும் நம் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்கிடும்கிறது குரானை படிச்சா விளங்கும்.. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா என்னதான் மனிதன் எப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல சில விஷங்கள் நம்ம கையில் இல்லை.. இதை உணர்ந்தவங்க பொறுமையோட இருப்பாங்க, உணராதவங்க நிம்மதியை தொலைச்சிடுவாங்க..

ப‌டிக்கும் கால‌ங்க‌ளில் விளையாட்டுப்போக்கா இருந்தாலும், இறைந‌ம்பிக்கை என‌க்கு என்றும் உறுதியாக‌ இருந்திருக்கு, இறைவ‌னின் அருளால்.. ஈமான் என்னும் இறைந‌ம்பிக்கை என‌க்கு வாழ்க்கைய‌ ரொம்ப‌ எளிதா ஓட்ட்க்க‌த்துக்கொடுத்திருக்கு..


அல்ஹ‌ம்துலில்லாஹ்! எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே!!


****