Monday, October 19, 2009

MBA படிக்க போறீங்களா? பாகம் 3

மூன்றாம் பாகம் வரைக்கும் இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு நினைக்கல.. உங்கள் ஆதரவுக்கு நன்றி!

MBA சார்ந்த துறைகளை  பற்றி தெரிஞ்சாச்சு, அடுத்து என்ன, இந்தியாவிலுள்ள சிறந்த கல்லூரிகளைப்பற்றி தெரிஞ்சுக்கணும்.

முதல்ல ஒரு எச்சரிக்கை மணி அடிச்சிட்றேன்.. மக்களே, ஆங்கில நாளிதழ்கள்ள பக்கம் பக்கமா விளம்பரம் கொடுக்கற உப்புமா கல்லூரிகளை எல்லாம் அப்படியே ஒதுக்கி தள்ளிடுங்க. இலவசமா மடிக்கணினி குடுக்றேன்னுவான், வெளிநாட்டு டூர்னு சொல்லுவான், கோட்டு சூட்டெல்லாம் போட்டு கட்டை விரல உயர்த்தி காமிக்கற பசங்க போட்டோ போட்டு நம்மள அப்படியே கவுத்திடுவான்.. போதாத குறைக்கு  நீங்க அங்க படிச்சா வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் அப்படியே உங்கள லட்டு மாதிரி தூக்கிட்டு போய்டுவாங்கன்னு  நம்ப வைப்பான்.. நீங்களும்  சரி என்ன அந்த institute போயி பாத்துடுவுமேன்னு  போவிங்க, அங்க முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட, wi fi enabled கட்டடத்த பார்த்து வாய பிளந்து, பீஸ் பத்தின விவரங்களை கேட்டா, அப்படியே ரெண்டு வருசத்துக்கு ஏழெட்டு லட்சம் வரும்.. கொஞ்சம் மண்ட காஞ்சு receptionist எ பார்த்தா, அவங்க கவலைபடமா லோன் இருக்குறத பத்தி சொல்லுவாங்க.

எல்லாத்தையும் நம்பி, உள்ள போயி சேர்ந்ததுக்கு அப்புறம் தான் தெரியும், இவங்கல்லாம் நம்பர் ஒன் டுபாகூர்னு. இந்திய முழுக்க ஒரு institute அதனுடைய பல கிளைகளை நிறுவி, இப்படிதான் ஊர ஏமாத்திட்டு இருக்கு...

இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க, இல்லாண்டாலும் சொல்றேன், IIPM-Indian Institute of Planning and Management. பேரெல்லாம் பந்தாவா தான் இருக்கு, ஆனா அவங்களோட விளம்பரத்துல கிளைம் பண்றது எல்லாமே பச்சை பொய்.. மாணவர்களை ஏமாற்றி இவ்வளவு எளிதா கோடி கொடியா பகல் கொள்ளை அடிக்குற இந்த நிறுவனத தடை செய்யாம நம்ம அரசு என்ன பண்ணிட்டு இருக்குன்னு தான் தெரியல.

இந்த கல்லூரிய பத்தின முழு விவரங்களையும் Outlook பத்திரிக்கை வெளியிட்டு இருக்கு.. இதை பாருங்க, இன்னும் நிறைய பேருக்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்க. நன்றி!

இது போல இன்னும் பல கல்லூரிகள் சரியான அங்கீகாரம் பெறாமலேயே நடந்துட்டு தான் இருக்கு.. நம்மளோட வருங்காலம், அதனால நாம தான் கேக்குறவங்க கிட்ட கேட்டு, ஒழுங்கான கல்லூரியா தேர்ந்தெடுக்கணும்.

ஓகே, இப்போ சிறந்த கல்லூரிகளோட பட்டியலுக்கு வருவோம். திரும்பவும்
 இன்னொரு எச்சரிக்கை மணி: இதெல்லாம் நாம ஒரு ஐடியா வுக்கு தான் பார்க்கணுமே ஒழிய இதை வெச்சு முடிவு செய்ய கூடாது. எப்பவுமே இந்த மாதிரி பட்டியல்களோட நம்பத்தன்மை பத்தி ஒரு சர்ச்சை இருந்துகிட்டே இருக்கும், அதே போல அதுல சொல்றதெல்லாம் உண்மையா இல்லாம இருக்கவும் வாய்ப்பு இருக்கு. இதை ஒரு கருவியா பயன்படுத்தி நாம சுயமா முடிவெடுக்கறது தான் முக்கியம்:

1. Wall Street Journal Ranking: Wall Street Journal பத்தி சொல்வதற்கு ஒண்ணுமில்லை.  ரொம்பவே புகழ்பெற்றவங்க. அவங்களோட பட்டியல் இது.  இந்திய அளவுல அரசுதவி பெற்ற கல்லூரிகள்ல, நம்ம தமிழ்நாட்டில் உள்ள  Bharathidasan Institute of Management 14 வது இடத்தில இருக்கு,,  அதே போல, சென்னையில் உள்ள IFMR, கோவையில் உள்ள PSG, Amirtha School of Business போன்ற தனியார் கல்லூரிகளும் புகழ்பெற்றவை. நான் கேள்விபட்ட வரைக்கும் PSG, ASB யில் placements நல்லா இருக்கும்

2. Outlookindia.com Survey: இன்னொரு பெரிய பட்டியல். இந்தியாவிலுள்ள எழுபத்தி ஐந்து MBA கல்லூரிகளை பற்றியது. இதுல தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகள் இடம்பெற்றிருக்கு. ஆனா இந்த பட்டியலில் எனக்கு முழுக்க உடன்பாடில்லை. பல நல்ல கல்லூரிகள் பின் தள்ளப்பட்டிருக்கு..அந்த பக்கத்தில் உள்ள பின்னூட்டங்களை பார்த்தால் தெரியும். இருந்தாலும், இந்த பட்டியல் நிச்சயமா ஒரு ஐடியா கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

3. Pagalguy.com Rankings: pagalguy.com குறிப்பா MBA மாணவர்களுக்கான வலைத்தளம். இங்க உங்களுடைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கலாம். முயற்சி செஞ்சு பாருங்க. சென்னையில புதுசா நிறுவப்பட்டிருக்குற Great Lakes Institute of Management இந்த பட்டியல்ல இடம் பெற்றிருக்கு.

இப்போ ஓரளவுக்கு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், நம்ம நாட்டுல உள்ள நல்ல கல்லூரிகளைப்பற்றி. இந்த கல்லூரிகளெல்லாம் எந்த மாதிரி நுழைவு தேர்வு எடுப்பாங்க என்பத விசாரிச்சிட்டு, அதுக்கேத்த மாதிரி படிங்க.

MBA படிப்ப பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருக்கலாம், அதெல்லாம் அப்பப்போ தோணும்போது பதிவா போடுறேன், இறைவன் நாடினால்,  இப்பதைக்கு இந்த தொடர முடிச்சிக்கறேன். உங்களுக்கு வேறெதுவும் தெளிவு படுத்தனும்னு நினைச்சிங்கன்னா பின்னூட்டம் மூலமா தெரியப்படுத்துங்க!

நன்றி!

Sunday, October 18, 2009

MBA படிக்க போறீங்களா? பாகம்-2

என் பதிவை நம்பி, படிச்சு, ஒட்டு போட்டு, கமெண்ட் எழுதி ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!! :) ரொம்பவே உற்சாகமா இருக்கு..அதே உற்சாகத்தோட இதோ இந்த பதிவும்.

முதலில் என்னென்ன specialisations இருக்குன்றத பார்ப்போம்.

1. Finance/நிதித்துறை: நிறைய பேர் விரும்பும் ஒரு துறை இது. பணம் சம்பதப்பட்டதாலயோ என்னமோ, தெரியல (என்னோடைய துறையும் இது தான்!). முதல்ல காமர்ஸ் அல்லது அக்கௌண்ட்ஸ் பின்னணி இருக்குறவங்களுக்கு தான் ஏற்றதுங்க்ற  மாதிரி இருக்கும், ஆனா முன்ன சொன்னது போல அப்படி கிடையாது. முதல் வருஷம் காமர்ஸ் படிச்சா எங்களைஎல்லாம் தலைவர்களா போட்டு இன்ஜினியரிங் போன்ற மத படிப்பு படிச்சவங்களுக்கு சொல்லி தர சொல்லுவாங்க. அப்போல்லாம் ரொம்ப பந்தாவா இருக்கும்.. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அப்புறம் back to square one. :) உங்களுக்கு கணக்கு, வழக்கு, கணிதம், எல்லாம் ரொம்ப பிடிக்கும் என்றால் இது தான் உங்களுக்கு ஏற்ற கோர்ஸ். சோ, கலக்குங்க! வேலை வாய்ப்பு பொறுத்த வரைக்கும் நிறைய வழிகள் இருக்கு. நான் ரொம்ப விரிவா எழுதல, ஒரு ஐடியா தான்

 •     Equity Research Companies : நான் இருக்குற துறை, இதை பத்தி விரிவா இன்னொரு நாள் சொல்றேன். நிறைய ஆர்வமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துறை இது.. ரொம்ப எளிதா சொல்லனும்னா, investment banks, hedge funds, banks போன்ற நிறுவனங்களுக்கு அவங்களு ஏற்ற வகைல business/finance சம்பத்தப்பட்ட ஆராய்ச்சி பண்ணி குடுக்கறது. நல்ல சம்பளம் கிடைக்கும், ஆனா வேலை பளு அதிகமா இருக்கும். Irevna, City Analyitcs, போன்ற நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பை அளிக்குது
 • Banks: இதை பத்தி சொல்லவே வேண்டாம். ஒவ்வொருத்தருடைய அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்றவாறு வேலை கிடைக்கும். நிறைய பேர்  விரும்பறது risk management, risk analysis, போன்ற துறைகளை
 • Investment Banks: Goldman Sachs, JP Morgan போன்ற நிறுவனங்கள் தான் முக்கால்வாசி MBA க்களின் கனவு. சம்பளம் சும்மா superaa குடுப்பாங்க. அங்க முதல்ல trainee ஆக போயி, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம்.
 • Consultants: Ernst & Young, McKinsey, PWC போன்ற பிக் 4 கம்பனிகளும் உங்களுக்கு வேலை வாய்ப்பு தரலாம். 
 • IT/Software: இதையும் யாரு விட்டு வைப்பார்? பொதுவா நிதி சம்பத்தப்பட்ட மென்பொருள் செய்யும் நிறுவனங்கள் MBA Finance படிச்சவங்களை Business Analyst ஆ எடுப்பாங்க.  இன்போசிஸ் தன்னுடைய finacle மென்பொருளுக்காக MBA finance படிச்சவங்களை எடுப்பாங்க. அதே போல ERP, SAP போன்ற துறைகளிலும் நல்ல வேலை வாய்ப்பு இருக்கு
இது போக மற்ற நிறுவனங்களிலும் நிறைய வேலை வாய்ப்பு இருக்கு. Manufacturing companies எனப்படும் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் எல்லாம் தங்களுடைய நிதி நிர்வாகதுக்காகவும் உங்களை தேர்ந்தெடுக்கலாம்

2.Marketing: எனக்கு தெரிஞ்சு எங்க கல்லூரியில உள்ள mechanical engineers எல்லாரும் விரும்பி எடுத்த துறை இது. நிறைய பேருக்கு விற்ப்பனை பிரிவில் சேர்ந்து பெரிய ஆளாகிடனும்னு ஆர்வம் இருக்கும். எங்க வகுப்பில் ஒரு தடவை ஒரு ஆசிரியர் சொன்னார், நிறைய நிறுவனங்களோட மேலிடத்துல இருப்பவர்கள் (CEO) எல்லாம் விற்ப்பனை பிரிவில் தான் முதலில் தொடங்கினார்கள் என்று. அங்க தான் ஒரு நிறுவனத்தோட நுணுக்கங்களை எல்லாம் நேரடியான மக்கள் தொடர்பின் மூலமா தெரிஞ்சுக்க முடியும்.. என்ன தான் நிதித்துறை எடுத்த பணம் சம்பாதிக்கலாம் என்றாலும் ஒரு தொழிலின் இண்டு இடுக்கெல்லாம் தெரிய வைக்குற துறை இது தான். 

 • Sales Profile: பலதரப்பட்ட நிறுவனங்களில் அவர்களுடைய தயாரிப்பை (product & services ) மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலை. இது நீங்க ஒரு சிமெண்ட் நிறுவனதுளையும் வேலை செய்யலாம், ஒரு வங்கியில் அதனுடைய கடன் வசதிகளை விற்கும் பிரதிநிதியாகவும் ஆகலாம். நல்ல வேலை செஞ்சா குறுகிய காலத்துல பல சிகரங்களை தொடலாம்
 • Brand Management: ஒரு பொருளின் பெயர், அது சம்பம்தம்பட்ட  நிறம், லோகோ, போன்ற எல்லாத்தையும் நிர்வாகம் செய்யும் வேலை. அதாவது Britannia Biscuits என்று சொன்னால் உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருதோ அதெல்லாம் உருவாக்குற வேலை. ரொம்ப exciting ஆனா துறை இது
 • Statiscal/Marketing Research: இது கணிதம் ரொம்ம்ம்ம்ப பிடிச்சவங்களுக்கு. எப்பவுமே மார்க்கெட்டிங்க  பொறுத்தவரை ஆராய்ச்சி பண்றது ரொம்ப முக்கியம்.. அதை சார்ந்த நிறுவனங்கள் அளிக்கும் வேலை. AC Nielsen, Dexterity போன்ற நிறுவனங்கள் வேலை கொடுக்கலாம்
3. Human Resources: ஒரு நிறுவனத்துல ஆட்களை எடுப்பது, அவர்களுக்குரிய சம்பளம், ஊக்கத்தை நிர்வாகம் செய்வது, அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை எடுப்பது போன்ற வேலை. படிப்ப பொறுத்த வரைக்கும் கொஞ்சம் சைகொலோஜி எல்லாம் இருக்குற மாதிரி இருக்கும். உங்களுக்கு மனிதர்களையும், அவர்களை படிப்பதிலும் விருப்பம் இருக்குமாயின்  இது தான் உங்களுக்கு ஏற்ற துறை. எல்லாவிதமான நிறுவனங்களிலும் உங்களுக்கு வேலை வாய்ப்புள்ளது.

4. Systems: நமக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத படிப்பு. அதனால மேலோட்டமா சொல்லிடறேன். நாம ப்ரோக்ராம் எல்லாம் எழுத போறதில்ல, ஆனா consultant ஆ   போகலாம். வேலை வாய்ப்பை பற்றி சொல்லவே வேண்டம், இருக்கவே இருக்கு ஏகப்பட்ட IT  நிறுவனங்கள்

முதல் இரண்டு துறைகளான Finance & Marketing தான் என்னடைய துறை.. அதனால கொஞ்சம் அதிகம் தகவல்களை கொடுத்துள்ளேன்.. ஹீ ஹீ..

அப்புறம் நிறைய கல்லூரிகள்ல dual specialisation எனப்படும் இரட்டை துறைகளை தேர்ந்தேடுக்கலாம். நிறைய இன்ஜினியரிங் படிச்சவங்க finance/marketing பிடிக்காம safe ஆ systems/HR போய்டுவாங்க. அதே போல நிறைய Commerce/Accounts படிச்சவங்ககூட ஏகப்பட்ட Maths இருக்குறத பாத்துட்டு finance எ வேணாம்னு முடிவு பண்ணிடுவாங்க. அப்படி எல்லாம் இல்லாம, நமக்கு எந்த துறைய எடுத்தா சரியா வரும் என்கிறத  முடிவு செஞ்சுட்டு மறு வேலைய பாக்கணும்.

என்ன எந்த துறைன்னு முடிவு செஞ்சாச்சா? தமிழ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற MBA கல்லூரிகளை பற்றி அடுத்த பதிவில் பார்போம்! இன்ஷா அல்லாஹ்!

Thursday, October 15, 2009

MBA படிக்க போறீங்களா?

ஏதோ நமக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னு. இதுல நிறைய விஷயம் உங்களுக்கு ஏற்கெனெவே தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும்:
MBA வை பொறுத்த வரைக்கும் இன்ன படிப்பு தான் படிச்சிருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க UG எந்த துறைல செய்திருந்தாலும் MBA படிக்கலாம். ஆனா அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் படிச்சவங்களுக்கு தொடக்கத்துல கொஞ்சம் எளிதா இருக்கிற மாதிரி  இருக்கும். அதெல்லாம் முதல் வருஷம் மட்டும் தான், இரண்டாவது வருஷத்துல எல்லாருமே சமமா தான் இருப்பாங்க.


எந்த கல்லூரியில படிக்கிறதுன்னு முடிவு பண்ண முன்ன, எப்படிப்பட்ட MBA பண்ண போரோம்கிறது முக்கியம். எனக்கு தெரிஞ்சு இந்த படிப்ப நாலு வகையா பிரிக்கலாம்:


 • CAT, XAT, RAT (ஹிஹி,,, இது சும்மா தமாசுக்கு) எழுதி  B-Schools எனப்படும் பெரிய, பை நிறைய சம்பளம் கொடுக்கம் நிறுவனங்கள் வருகை தரும், பல முன்னணி ஏடுகள் தரவரிசை பட்டியலில் இடம்பெறும் IIM, XLRI, போன்ற கல்லூரிகள் 
 •  TANCET எழுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்வது (பெரும்பாலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில்)
 • All India Management Association (AIMA) நடத்தும் MAT எழுதி அந்த தேர்வை ஏற்கும் சில கல்லூரிகளில் படிப்பது
 • IGNOU, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தொலை தூர கல்வி பயில்வது
 • ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது
மேற்கொண்டு செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்கிறேன்: MBA விற்கும்  IIM போன்ற கல்லூரிகள் கொடுக்கும் PGDBM, PGDBA போன்ற பட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்; பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தால் அது MBA, தன்னிச்சையாக ஒரு institute பட்டம் கொடுத்தால் அது PGDBA/PGDBM அவ்வளவே.

முதலில் நீங்க எந்த மாதிரி MBA படிக்க போறீங்கன்னு முடிவு செஞ்சுக்கோங்க. MBA வை பொறுத்த வரை நீங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்கன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவும் B School Ranking என்று பல முன்னணி இதழ்கள், AC Nielsen போன்ற சர்வே நிறுவனங்கள் வெளியிடும். அதுல எப்பவும் முதல் இருபது-முப்பது கல்லூரிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகத்துல  வெச்சுக்கோங்க, இது போன்ற தர வரிசையில் கூட நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதனால எப்பவும் நம்மால முடிஞ்சா நல்ல ஆராய்ச்சி பண்ணின பிறகு தான் எந்த கல்லூரின்னு தேர்ந்தெடுக்கணும்.

ஒரு வேளை நீங்க CAT, XAT போன்ற தேர்வுகளை எழுதிட்டு, IIMs ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். அல்லது நீங்க தேர்ந்தெடுத்த கல்லூரிகள்ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். நீங்க இந்த தேர்வு எழுதினத  வெச்சிட்டு உங்களுக்கு நிறைய உப்புமா கல்லூரிகள்ல இருந்து தானாகவே அழைப்பு வரலாம். எந்தெந்த கல்லூரிகள்ல சேர ஐடியா இருக்கோ, அதை பத்தி நம்மாலான ஆராய்ச்சிய தொடங்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அங்க படிச்ச மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கலாம்:

 •  Specialization: MBA வில் கண்டிப்பா நமக்கென்ன துறை பிடிக்குதோ, அந்த துறையில் அந்த கல்லூரி பெயர் பெற்றிருக்கான்னு பார்க்கும். சில கல்லூரிகள்ல சில துறைகளுக்கு மதிப்பே இருக்காது. அங்க நீங்க அந்த துறை எடுத்த, கரை செற்றது கஷ்டமா போய்டும்.
 • Placements: எனக்கு தெரிஞ்சு யாரும் அறிவை வளர்க்குரதுக்கு MBA படிக்கலை. முக்கால்வாசி பேர் தங்களுடைய சம்பள அளவு உயரனும்னு தான் படிக்கிறாங்க. அதனால நீங்க படிக்கச் போற இடத்துல நூறு சதம் placemens இருக்கான்னு பாக்கணும். அதே போல மாணவர்கள் கட்டாயம் எதுவும் இல்லாம தங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு மட்டும் apply பண்ணும் வசதி இருகான்னும் பாக்கணும்
 • Faculty: எத்தனை பேர் நிரந்தர விரிவுரையாளர்கள், எத்தனை பேர் அப்பப்போ வரும் visiting faculty என்று பாக்கணும். பொதுவா பெரிய பெரிய பொறுப்புகளள இருக்குற சில பேர் தங்களுடைய ஆர்வம் காரணமாக வந்து சொல்லி கொடுப்பாங்க, அது நம்மளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். எந்தெந்த நிறுவனங்கள்ல இருந்து வாரங்கன்றத நாம கண்டிப்பா தெரிஞ்சிகிட்டா  நல்லது
 • Infrastructure: எல்லாம் ஒழுங்க இருந்தா தான் நமக்கும் படிக்கச் வசதியா இருக்கும். விடுதியில இன்டர்நெட் வசதி தங்கு தடையில்லாம வருதா, நாம ஆராய்ச்சி பண்ண வசதியா database களுக்கு சந்தா செளுதியிருகா, போன்றவைகளை கவனிச்சிக்கணும்
சரி, எல்லாத்தையும் சொல்லி இதையும் சொல்லிடறேன். B School களில் படிச்சா ஒரு பாஸ்போர்ட் மாதிரி, அவ்வளவு தான். அதுக்கப்புறம் ஒவ்வொருதர் உயர்வை அடையறதும் அவரவர் திறமையை பொறுத்தே. எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்கள்ள, IIM-A ல படிச்சிட்டு வந்து கேவலமா சொல்லி கொடுத்தவங்களும்  இருந்தாங்க, நம்ம Madras University ல படிச்சிட்டு சூப்பரா சொல்லி கொடுத்தவங்களும் இருக்காங்க.

அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகள், எந்தெந்த துறைய தேர்ந்தெடுப்பதுன்னு பாப்போம்.