Monday, December 21, 2009

கடனும் வட்டியும் அது போடும் குட்டியும்

பரக்கத்!

தமிழை தாய் மொழியாகக்கொண்ட பல முஸ்லிம்கள் பேச்சு வழக்கில் சில அரபி வார்த்தைகளை கலந்து பாவிப்பதுண்டு. ஹயாத்து (வாழ்வு), மவுத்து (இறப்பு), ரிஸ்க் (உணவு), ராஹத்து (இதம்), நஸீப் (இறைவன் விதித்தது) போன்றவைகளுள் ஒன்றுதான் பரக்கத். பரக்கத் என்றால் பலர் நிறைய பண வரவு மட்டுமே என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பரக்கத் என்பது இறைவனின் அருளால் தன்னிறைவு பெறுதல். அதாவது ஒருத்தர் மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சாலும் ரெண்டு லட்சத்துக்கு கிரடிட் கார்டை தேய்ச்சு செலவு செய்கிறவங்களும் இருக்காங்க,அதே போல ஆயிரம் ரூபாயே வருமானம் என்றாலும் அந்த ஆயிரத்துக்குள் குடும்பம் நடத்தி, அதில் கொஞசமாச்சும் மிச்சம் பிடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா?


முன்னெல்லாம் நாம கடனாளியா இருக்கறத யாருமே விரும்ப மாட்டோம். எப்படி நமக்கு ஒரு உடல் உபாதை வரக்கூடாதுன்னு நினைப்போமோ அப்படித்தான் கடனாளியாகவும் ஆகக்கூடாதுன்னு நினைப்பொம் இல்லையா?
ஆனா ஒரு ஏழெட்டு வருஷமா என்ன நடக்குது? உலகமயமாக்கல்ன்ற பேர்ல கோக கோல, பெப்சியோட சேர்ந்து வந்த்து தான் இந்த க்ரெடிட் கார்டும். இரண்டு வருசம் முன்னாடி வரைக்கும் நம்ம நாட்டோட பொருளாதாரம் (அதுலயும் எனக்கு உடன்பாடில்லை. நாட்டோட வளர்ச்சி என்பது எல்லா மக்களையும் சேர்ந்தடையும் சமமான வளர்ச்சியாக இருக்கனுமே ஒழிய ஒரு சாரார் மட்டுமே வளர்ச்சியின் பயன்களை அனுபவிப்பது ஏற்க முடியாது) தாறுமாறா வளருதுன்னு பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கூவிக்கிட்டு இருந்தப்போ பத்துல எட்டு பேருக்காச்சும் சார் தயவு செய்து லோன் வாங்கிக்கோங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு போன் கால்கள் வந்திருக்கும் (அது இப்பவும் தொடரத்தான் செய்யுது). உசாரானவங்க தப்பிச்சிருப்பாங்க. ஆனா பல பேர் "சும்மா வரத ஏன் வேண்டாம்னு சொல்லனும்", "நாம என்ன தேய்க்கவா போறோம், சும்மா வாங்கி வெச்சுப்போமே", "இப்ப‌ வாங்கி வெச்சுட்டா ஏதாச்சும் அவ‌ச‌ர‌த்துக்கு உத‌வும்". பெர்ச‌ன‌ல் லோன் ம‌ற்றும் கார்டை வெச்சிருப்ப‌வ‌ங்க‌ பெரும்பாலும் இந்த‌ கார‌ண‌ங்க‌ள்ல‌ ஏதாச்சும் ஒண்ண தான் சொல்லுவாங்க‌, இல்லையா?

இப்ப‌டி வ‌ரைமுறை இல்லாம‌ க‌ட‌ன் குடுக்குற‌தும், க‌ட‌ன் வாங்குற‌தும் அமெரிக்க‌ க‌லாச்சார‌ம். அங்க‌ சேமிப்புங்க‌ற‌து ஒரு கான்ச‌ப்டே இல்லை, அது த‌னி ம‌னித‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, அர‌சாங்க‌மா இருந்தாலும் ச‌ரி. இன்னும் சொல்ல‌ போனா நாங்க‌ எம்.பி.ஏ வுல‌ ப‌டிச்ச‌ நிதி நிர்வாக‌ம் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ ச‌ப்ஜ‌க்டுக‌ள்ல‌ உள்ள‌ அமெரிக்க‌ன் திய‌ரிஸ்டுக‌ளெல்லாம் க‌ட‌ன் வாங்குற‌தால‌ ஒரு க‌ம்பெனியின் நிக‌ர‌ லாப‌ம் (net profit) கூடும் என்ற‌ எம் & எம் திய‌ரி தான் நாங்க‌ல்லாம் முட்டி மோதி ப‌டிச்சிட்டு இருந்தோம் (சிம்பிளா சொல்ல‌னும்னா, க‌ட‌ன்ல‌ க‌ட்ட‌ வேண்டிய‌ வ‌ட்டி தொகை வ‌ருமான‌ வ‌ரிக்கு உட்ப‌டாது, அத‌னால‌ ஒரு பங்குக்குரிய லாபத்தொகை அதிகமாகுமாம்.. ஏதோ தலையை சுத்தி மூக்கை தொடுவது போல இல்ல?

எப்பவுமே கடன் என்பது ஒரு அவசரத்தேவைக்காக, நம்மிடம் இருப்பது போக வாங்குவதாகத்தான் இருக்கணுமே ஒழிய எளிதா கிடைக்குதேன்னு வாங்கி போடக்கூடாது. இது ஒரு தனி மனிதனுக்கும் மட்டுமல்லாமல் அரசுக்கும், நிறுவனங்களுக்கும் கூட பொருந்தும். உலக பணக்காரர்களில் முதல் இரண்டு இடங்கள்ல இடம் வகிக்கும் வாரன் பஃபெட் கூட அதிகமா கடன் பட்டிருக்கிற நிறுவனங்கள நாட மாட்டாரு.

உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது, ஆனா இஸ்லாத்தை பொறுத்தவரை வட்டி வாங்குவது என்பது கொலைக்குற்றத்துக்கு சமம். வட்டி வாங்குபவர் இறைவனுடனும் நபியுடனும் போர் செய்கிறார் என்றே குரானில் இறைவன் கூறுகிறான்.


ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)


இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)


அப்ப நாம கடன குடுத்துட்டு என்ன செய்றதாம்? அவனுக்கு கடன் குடுக்காம நான் ஒரு தொழிலில் முதலீடு செய்திருந்தாலோ அல்லது ஒரு வீடு கட்டியிருந்தாலோ அது மூலமா எனக்கு வருமானம் வந்திருக்கும். இன்னைக்கு நூறு ரூபாய்க்கு இருக்குற மதிப்பு ஒரு வருஷம் கழிச்சு கண்டிப்பா அதுக்கும் குறைவாதான் இருக்கும் (அதாவது டைம் வேல்யூ ஆஃப் மனி). அப்படி இருக்கும்போது நான் வட்டி கேக்குறது எப்படி அநியாயமாகும்? நான் கடன் கொடுத்ததால இழந்த பணத்தை (ஆப்புர்ட்யூனிட்டி காஸ்ட்) ஈடு செய்யத்தானே கேக்குறேன்? என்ற "நியாயமான" காரணங்களை பலர் எடுத்து வைப்பதை நான் கேட்டிருக்கிறேன். இன்னும் பலர் வட்டின்னா அது மீட்டர் வட்டி, கந்து வட்டி தான், சாதரணமா வங்கிகள் சேமிப்பு மீது கொடுக்கும் வட்டி நியாயமானது தான் என்று கூறுவார்கள்.

நாம‌ முன்ன‌ க‌ட‌ன் எதுக்கு வாங்குறோம்கிற‌ அடிப்ப‌டையை பாத்தோம். இஸ்லாத்துல‌ கட‌ன் கொடுப்ப‌து என்ப‌து த‌ர்ம‌ம் செய்வ‌து போல‌.. க‌ஷ்ட‌த்தில் இருக்கும் ஒருவ‌ருக்கு க‌ட‌ன் கொடுத்து, அவ‌ருக்கு முடியாத‌ ப‌ட்ச‌த்தில‌ அந்த‌ க‌ட‌னை த‌ள்ளுப‌டி செய்வ‌து மிக‌வும் ந‌ன்மைக்குரிய‌ விச‌ய‌மாக‌ க‌ருதப்ப‌டுகிற‌து. அதே போல‌ க‌ட‌ன் வாங்கிய‌வ‌ர் ந‌ல்ல‌ நில‌மையில் இருந்தால் அவ‌ர் வாங்கிய‌தை விட‌ அவ‌ர் இஷ்டத்திற்கு அதை சிற‌ப்பாக‌ திருப்பி கொடுக்க‌லாம். நினைவில் கொள்க‌: க‌ட‌ன் கொடுத்தவ‌ர் அதை ஒருபோதும் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ முடியாது.

எப்படி வட்டியின் மூலம் பணம் சம்பாதிப்பது அனுமதிக்கப்படலயோ அதே போலத்தான் ஸ்பெகுலேசன் எனப்படும் நிச்சயமற்ற தன்மை உடைய வியாபாரத்தில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்படல. ஆனா பங்கு வர்ததகத்தை வர்த்தகத்துல ரொம்ப சாதரணமா நடக்குது- டே ட்ரேடிங்‍: ஒரே நாளில் பங்கை வாங்கி விற்பது, ஆப்ஷன்ஸ்‍‍: இன்னைக்கு ஒரு பங்குகுக்கு ஒரு விலை நிர்ணயம் பண்ணிட்டு அதை ஆறு மாசம் கழிச்சு விலை குறைஞ்சா வாங்குவது எல்லாமே சூதாட்டத்தை போலத்தான். இரண்டு வருசம் முன்ன ஒரே நாளில் சென்செக்ஸ் பல ஆயிரம் புள்ளிகளை தாண்டுவதும், கொஞ்ச நாளைல அது அதல பாதாளத்தை தொடுவதற்க்கு காரணம் இது தான். பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்த விளையாட்டை விளையாட நம்ம நாட்ட பயன்படுத்தியது வேற கதை!

இன்றைய‌ கால‌க்க‌ட்ட‌ங்க‌ள்ல‌ வ‌ட்டியும், ஒண்ணுமில்லாத‌ அடிப்ப‌டையில் பங்கு ச‌ந்தையில் ப‌ண‌ம் ஈட்டுவ‌தும் ஒரு நாட்டுடைய‌ பொருளாதார‌ அடிப்ப‌டையை எந்த‌ அள‌வுக்கு ஆட்டி வைக்குதுன்னு அமெரிக்கா என்னும் ஒரு நாடு மூல‌மாக‌வே பார்க்கிறோம்.
ம‌த்த‌ விஷ‌ய‌ங்க‌ளை போல‌வே ப‌ண‌ விஷ‌ய‌த்திலும் அதிக‌ப‌ட்ச‌ ஒழுக்க‌த்தை க‌டைப்பிடிக்கிற‌து எவ்வ‌ள‌வு ந‌ன்மைங்கிற‌து என‌க்கு ஒரளவுக்கு தெரியுது.. உங்க‌ளுக்கு?

டிஸ்கி: அமெரிக்க பொருளாதரத்தை பத்தி மார்க் ஃபேபர் என்னும் முதலீட்டாளர் என்ன சொல்றார்னு பாக்கனுமா? இதை படிங்க, ரொம்ப சுவையா இருக்கும்!

44 comments:

அண்ணாமலையான் said...

உங்க தலைப்பு பிரியாணியா? நான் பிரியா மணின்னு நெனச்சிட்டு உள்ள வந்துட்டேன்.. பரவால்ல நல்லாத்தான் இருக்கு... வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

நாஸியா வெகு அருமை இறைவசனங்களோடு சுட்டிக்காட்டிய விதம் அருமை..அல்லாஹ் நம் எல்லோரையும் வட்டியென்னும் மாபெரும் பாவத்திலிருந்து காத்துக்கொள்ள தவ்ஃபீக் செய்வானாக..

பதிவர்கூட்டத்துக்கு போனதை நீரோடையில் போட்டிருக்கேன்பா...

Prathap Kumar S. said...

புரியுது..புரியுது. கடன் வாங்கறதும் தப்பு, வட்டி வாங்கறது தப்புன்னு சொல்றீங்க... அதை முதல்லயே சொல்லியிருக்கலாமே... :-)

ஒழுங்கான பதிவே ரெண்டுவாட்டி படிச்சாத்தான் புரியும் நமக்கு இதுல
எம்பிஏங்கறீங்க.. தியரிங்கறீங்க, மார்க் ஃபேபர்கறீங்க ... சுத்தம்... பே: :-(

சுந்தரா said...

விவரமாச் சொல்லியிருக்கீங்க நாஸியா.

ஆனா, வட்டி வாங்கியே வாழ்ந்து கண்டவங்க அதை எப்போதும் விடப்போறதில்லைதான்.

ஹுஸைனம்மா said...

நல்ல பதிவு.

பண கொடுக்கல் வாங்கல்களை ஒரு ஒப்பந்தமாகப் பதிவு (எழுத்தில்) செய்துகொள்ளவும் இறைவன் வற்புறுத்துகிறான். அதுவும் சாட்சிகளோடு.

//க‌ட‌ன்ல‌ க‌ட்ட‌ வேண்டிய‌ வ‌ட்டி தொகை வ‌ருமான‌ வ‌ரிக்கு உட்ப‌டாது//

இந்தியாவிலும் இதற்காகவே கடன் வாங்குபவர்கள் உண்டு!!

அப்ப பங்கு வர்த்தகமும் தவறுங்கிறீங்களா? புது செய்தியால்ல இருக்கு!!

நிறைய சந்தேகங்கள் எனக்கும் இருக்கு. பின்னூட்டங்களிலும் கேள்விகளும், பதில்களும் வரும்னு எதிர்பார்க்கிறேன்.

நாஸியா said...

உங்க வருகைக்கு நன்றி சகோதரர் அண்ணாமலையான் அவர்களே!

நன்றி சகோதரி மலீக்கா..நீரோடையில கலக்கிருக்கீங்க.. எனக்கும் காதுல புகை வருது!!

\\புரியுது..புரியுது. கடன் வாங்கறதும் தப்பு, வட்டி வாங்கறது தப்புன்னு சொல்றீங்க... அதை முதல்லயே சொல்லியிருக்கலாமே... :‍)\\

கடன் வாங்குறது தப்பில்லை அவசியமில்லாமல் கடன் வாங்குவது தான் தப்பு..முதல்லயே சொன்னா எழுத‌ மேட்டர் இருக்கதுல்ல.. :)

\\ஒழுங்கான பதிவே ரெண்டுவாட்டி படிச்சாத்தான் புரியும் நமக்கு இதுல
எம்பிஏங்கறீங்க.. தியரிங்கறீங்க, மார்க் ஃபேபர்கறீங்க ... சுத்தம்... பே: :-(\\

ஐய்யோ வெள‌ங்க‌லியா? :( சே அடுத்த‌ முறையாச்சும் ஒழுங்கா எழுத‌றேன் ச‌கோத‌ர‌ரே..

நாஸியா said...

நன்றி சகோதரி சுந்தரா..

\\ஆனா, வட்டி வாங்கியே வாழ்ந்து கண்டவங்க அதை எப்போதும் விடப்போறதில்லைதான்\\

உண்மை தான். வட்டியை இப்பல்லாம் ரொம்ப நியாயப்படுத்துறாங்க. அதுதான் கடுப்பா இருக்கு..

நன்றி, ஹூசைனம்மா..

\\அப்ப பங்கு வர்த்தகமும் தவறுங்கிறீங்களா? புது செய்தியால்ல இருக்கு!!\\

ஒன்று அல்லது பல நிறுவனங்களின் பங்குகளை அதில் முதலீடு செய்வதற்க்காக‌ வாங்குவதில் தவறில்லை, அதை நமக்கு தேவைபடும் நேரத்தில் விற்பதும் தவறில்லை.. ஆனா டே ட்ரேடிங்க் எனப்படும் இன்னைக்கு காலைல வாங்கி மதியமே விற்குறது கிட்டத்தட்ட சூதாட்டமே..அதுதான் ஹராமாகப்பட்டுள்ளது..

உங்களுக்கு வேற என்ன சந்தேகம் இருந்தாலும் சொல்லுங்க, தெரிஞ்சா நான் சொல்றேன், தெரியலன்னா நானும் அதை பத்தி கத்துக்குவேன்! :)

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையான விஷயம் ரொம்ப ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க சகோதரி. வட்டியில்லாத வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கட்டும்.

ஸாதிகா said...

அழகிய குர் ஆன் ஆயத்துகளை எடுத்தியம்பி நிறையவே சிந்திக்க வைத்து விட்டது உங்களின் இந்த இடுகை

எம்.எம்.அப்துல்லா said...

//இன்றைய‌ கால‌க்க‌ட்ட‌ங்க‌ள்ல‌ வ‌ட்டியும், ஒண்ணுமில்லாத‌ அடிப்ப‌டையில் பங்கு ச‌ந்தையில் ப‌ண‌ம் ஈட்டுவ‌தும் ஒரு நாட்டுடைய‌ பொருளாதார‌ அடிப்ப‌டையை எந்த‌ அள‌வுக்கு ஆட்டி வைக்குதுன்னு அமெரிக்கா என்னும் ஒரு நாடு மூல‌மாக‌வே பார்க்கிறோம்.

//

இந்த அமெரிக்கா இருக்குல்ல, அது என்ன பண்ணுச்சு எல்லா நாட்டையும் தன்னோட முதலீடுக்கு ஏத்தமாதிரி கொள்ளையடிக்க டாலர் கன்வர்ஷன் மெத்தேடில் ஃபுல்கன்வர்ஷன் மெத்தேட் கொண்டு வந்துச்சு. அந்த சிஸ்டத்தை இந்தியாவிலேயும் அமுல் படுத்தனும்னு அமெரிக்க மைண்டட் ப.சிதம்பரம் சென்ற முறை நிதி அமைச்சரா இருந்தப்ப தீவிர முயற்சி பண்ணுனாரு. நம்ப இப்ப கடை பிடிக்கிற மெத்தேட் ஃபார்ஷியலில் கன்வர்ட்டட் மெத்தேட். இதை மாற்ற முயற்சி பண்ணுனப்ப அப்ப அரசுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட்டுகள், ”யோவ்!மருவாதிய அந்த மசோதாவை வாபஸ் வாங்கிக்க.இல்லாங்காட்டி நாங்க கவ்ர்மெண்ட்டு குடுத்துகினிகீற ஆதரவ வாபஸ் வாங்கிகிடுவோம்”னு ஒரு டகுல்வுட்டவுடனோ கம்முனு இருந்துகினாரு.

அது இன்னா ஃபுல் கன்வர்ஷன், ஃபார்சியல் கன்வர்ஷன்?? அதை மொதல்ல சொல்றேன்.


இப்ப இந்திய வங்கிகளில் நம்ம இந்திய பணமாத்தான் நம்ம அக்கவுண்ட் வச்சுக்க முடியும். நீங்க அமெரிக்காவில் இருந்து டாலர் அனுப்பினாலுஞ்சரி,துபாயில் இருந்து திர்ஹாம் அனுப்பினாலுஞ்சரி, இன்னைக்கு எக்ச்சேஞ்ச் ரேட் என்னவோ அதை இந்திய மதிப்பில் கன்வர்ட் செய்து ரூவாயா உங்க அக்கவுண்ட்ல போட்டுருவாங்க. இன்னும் எளிமையாச் சொல்லனும்னா நீங்க நியூயார்க்லேந்து இன்னைக்கு 1000 டாலர் இந்தியாவுக்கு அனுப்பிச்சா இன்னைக்கு எக்ச்சேஞ்ச் ரேட் 48.60 கணக்கு பண்ணி 48600 ரூபாய் இந்திய பணமா அக்கவுண்ட்ல போட்டுருவாங்க. நாளைக்கு அனுப்புறீங்கன்னு வச்சுக்குவோம். நாளைக்கு ரேட் 49 ன்னா உங்க அக்கவுண்ட்டில் 49,000 கிடைக்கும். அதாவது என்னைக்கு அனுப்புறீங்களோ அன்னைக்கு ரேட்படி வரவு.இது பார்சியல் கன்வர்ஷன்.

ஃபுல் கன்வர்ஷன்னா, நீங்க அனுப்புற 1000 டாலர் 1000 டாலராகவே டாலர் மதிப்பில் வைக்கப்படும்.இந்திய மதிப்பில் மாற்றப்படாது. கேக்க நல்லாத்தானே இருக்கு!இதுல என்ன பிரச்சனைங்குரீங்களா?? இருங்க ஒரு குட்டியூண்டு எக்ஸாம்பில்.

ப.சிதம்பரம் இந்த முயற்சி எடுத்து கம்யூனிஸ்டுகளால் முறியடிக்கபட்ட ஆண்டு 2007.அப்போ அமெரிக்கா இந்தியாவுல உள்ள முனியாண்டிவிலாஸில் முதலீடு பண்ண வருதுன்னு வச்சுக்குவோம். முனியாண்டி விலாஸில் இந்திய ரூபாய் 1,00,000 முதலீடு பண்ண விரும்பி அப்போ எக்ச்சேஞ் ரேட் 42 ரூபாய்க்கு USD 2,381 முதலீடு பண்ணுச்சு.
அப்ப அமெரிக்கா முனியாண்டிவிலாசுக்கு அனுப்புன டாலர் 2,381 ஐ நம்ப 1,00,000 ரூபாய் இந்தியா பணமாத்தான் எடுத்துகிட்டோம். இப்ப அமெரிக்கா அந்த பணத்தை திரும்பிக் கேட்டா ”இந்தா ராசா ஒன்னோட ஒரு லச்ச ஊவான்னு” திருப்பி குடுத்துடுவோம். சரின்னு அமெரிக்கா இன்னைக்கு லட்சருபாய் வாங்கி அவன் ஊருக்கு கொண்டு போக பேங்கில் போட்டா இன்னைக்கு டாலர் எக்சேஞ் மதிப்பு 48.60 ன்படி 2057 டாலர் தான் கிடைக்கும். நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. லட்ச ரூபாய் வாங்கினோம். அவன் பணம் இருந்த காலத்தில் அந்த முதலுக்கான லாபத்தையும் அதாவது முனியாண்டி விலாஸில் பிரியாணி விற்று வந்த லாபத்தையும் குடுத்தோம். திருப்பி கேட்டபோது லட்ச ரூபாயாகவே குடுத்து விட்டோம்.

ஆனால் அதே ஃபுல்கன்வர்ஷன் மெத்தேடாக இருந்தால் நாம் பெற்ற 1,00,000 ரூபாய்க்கு அமெரிக்கா அன்று குடுத்தது 2381. இன்று நாம் அதே 2381த்தான் திருப்பி குடுக்க வேண்டும். இன்றைய எக்சேஞ் ரேட் 48 ன்படி டாலர் 2381 க்கு நாம் குடுக்க வேண்டிய தொகை ரூபாய் 1,14,288.

அங்கேந்து அவன் காசை கொண்டு வருவானாம்.நம்பகிட்ட முதலீடு பண்ணுவானாம். அதோட லாபத்தையும் எடுத்துகிடுவானாம்.திருப்பி கொண்டு போகும்போது மாற்றுவிகிதத்திலும் கொள்ளை அடிப்பானாம்.

இன்னும் நிறைய இருக்கு மேற்கத்திய பொருளாதார சிந்தாந்தங்களின் மொள்ளை மாறித்தனங்கள். நேரம் கிடைக்கிறப்ப அப்பப்ப சொல்றேன்.( உங்களுக்கல்ல நாஸியா. உங்கள் வாசகர்களுக்கு. பிம்ல் எம்.பி.ஏ படித்த உங்களுக்கு இந்த மொக்கைச்சாமி என்ன சொல்ல முடியும்?)

எம்.எம்.அப்துல்லா said...

ஆனா டே ட்ரேடிங்க் எனப்படும் இன்னைக்கு காலைல வாங்கி மதியமே விற்குறது கிட்டத்தட்ட சூதாட்டமே..அதுதான் ஹராமாகப்பட்டுள்ளது //

இல்லை அது சூதாட்டம் அல்ல. இதுவும் வியாபாரம்தான். ஒரு நிமிடம் செய்தாலும் சரி, ஒரு மணி நேரம் செய்தாலும் சரி. ஒரு நாள்,ஒரு வருடம் செய்தாலும் சரி. எல்லாம் ஒன்னுதான். என் புரிதலின்படி அது ஹராம் அல்ல. காரணம் குறைந்த விலையில் வாங்குகின்றேன். ஏறும் சமயம் விற்கின்றேன். இது அனைத்து வணிகத்திலும் செய்வதுதான்.இதில் நாள்,நேரக் கணக்கென்ன??நான் செயற்கையாக விலையேற்றி விற்றால் மட்டுமே ஹராம்.செயற்கை விலை ஏற்றத்தை பலரும் குழுவாக இணைந்து செய்கின்றனர்.அவ்வாறு செய்து பொருளீட்டுவது பெரும் ஹராம்.

Prathap Kumar S. said...

அப்துல்லா அண்ணன் வாழ்க.. நிறைய மேட்டர் தெரிஞசுடுச்சு... முணியான்டி விலாஸ், பிரியாணி வித்த காசுன்னு இப்படி புரியற மாதிரி உதாரணத்தோடு சொன்னா நமக்கும் புரியும்.... நாஸீயா ரொம்ப டெக்னிக்கலா சொன்னாங்க... அதான் பிரியல... ரொம்ப நன்றிண்ணே... :-)

Barari said...

konjam padiththu vittaale islaththirkkum enakkum entha sambantham illai endru koori thiriyum peyar thaangi muslim penkal idaiyil quran athaaraththudan vattiyai patri vilakki arivurai koorum thangalai pondra sakotharikal iruppathai ninaiththu perumai padukiren.allah ungalukku allaah niraintha ayulaiyum nalla kalviyaiyum manam niraintha vazvinaiyum alikka iraivanidam manamara dhuva seikiren.vazthukal sakothari.

ஹுஸைனம்மா said...

காசு (ஃபைனான்ஸ்) விஷயமாச்சே, அப்துல்லா கண்டிப்பா வருவார்னு எதிர்பார்த்தேன். வந்துட்டார் முனியாண்டி விலாஸ் பிரியாணியோட!!

நல்ல விளக்கம். எனக்கும் புரியுது. (ஆனா என்ன என் ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி 5-ஸ்டார் உதாரணம் சொல்லியிருக்கலாம்.)

வங்கிகளில் சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதைவிட (வட்டி காரணம்) பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே நல்லது (லாப நஷ்டத்திலும் பங்கு) என்றே முஸ்லீம்கள் நிறைய பேர் நம்பி முதலீடு செய்கிறோம். அதுலயும் ஹராமான முறைகளைக் கொண்டு வந்தா என்னதான் செய்றது?

//உங்களுக்கு இந்த மொக்கைச்சாமி என்ன சொல்ல முடியும்?//

தன்னடக்கம்...ம்?

பீர் | Peer said...

நாஸியா மிக மிக நல்ல இடுகை. வாழ்த்துக்கள்.

கடன் கொடுக்கல் வாங்கலில் டைம் வேல்யூ ஆஃப் மணி யை தங்கத்தை வைத்தே நிர்ணயிக்கலாம் என்ற கருத்து நல்லதாகப்படுகிறது. அதாவது உங்களிடமிருந்து நான் வாங்கும் 1000 ரூபாய்கான தங்க மதிப்பிலேயே திரும்ப கொடுக்கலாம். தங்கவிலை ஏறவும் இறங்கவும் வாய்ப்புள்ளதால் நிச்சயமாக வட்டியாகச் சேராது. கடன் கொடுப்பவருக்கும் நட்டம் ஏற்படாது, தேவைப்படுபவர்களுக்கு கடன் கிடைப்பதும் எளிதாகும்.

வட்டி வாங்குபவர், கொடுப்பவர், சாட்சியளிப்பவர், கணக்கெழுதுபவர் என அத்தனை பேரும் குற்றவாளியே தண்டனைக்குரியவரே.

பீர் | Peer said...

அப்துல்லா அண்ணே, கோபமாகக் கேட்கிறேன், இதையெல்லாம் நீங்க ஏன் தனி இடுகையாக எழுதுவதில்லை? இவ்வளவு எளிதான விளக்கம்.. அருமை. டே ட்ரேடிங் சரியான கருத்து.

ஆமா நாஸியா, நபித் தோழர்களும் தின வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ஹதீஸ்கள் இருக்கிறது. பண முதலீடு செய்து பொருள் வாங்கி லாபத்திற்கு அல்லது நட்டத்திற்கு விற்பது ஹராமாகாது.

ஆனால் இல்லாத பொருளை வாங்கி விற்கும் கமோடிட்டி ட்ரேடிங் பற்றி சரியாகத் தெரியவில்லை. அப்துல்லா அண்ணே இது பற்றி என்ன நினைக்கிறீங்க?

நாஸியா said...

நன்றி நவாஸ் காக்கா & ஸாதிகா லாத்தா..

கன்வர்டபிளிட்டி பத்தி நல்லாவே விளக்கினீங்க..1997ஆம் வருசத்துல தென் கிழக்காசிய நாடுகள்ல நடந்த நெருக்கடி நமக்கு பரவாம தடுத்ததே நாம ஃபுல் கன்வர்டபிளிட்டிக்கு போகாம இருந்தது தான்..
தொட‌ர்ந்து உங்க‌ க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்துக்கோங்க‌.
ஆமா மொக்கைசாமின்னு சொல்றது எல்லாம் ரொம்ப ஓவர் ஆமா.. பிம்ல படிச்சத நான் மறந்தா கூட நீங்க மறக்க மாட்டீங்க போல. :)

\\இல்லை அது சூதாட்டம் அல்ல. இதுவும் வியாபாரம்தான். ஒரு நிமிடம் செய்தாலும் சரி, ஒரு மணி நேரம் செய்தாலும் சரி. ஒரு நாள்,ஒரு வருடம் செய்தாலும் சரி. எல்லாம் ஒன்னுதான். என் புரிதலின்படி அது ஹராம் அல்ல\\

சரியா சொல்லனும்னா அது ஹராமா ஹலாலான்னு நான் முடிவு செய்யக்கூடாது. ஆனா என்னை பொறுத்த வரை அது ஹராமுக்கும் ஹலாலுக்கும் நடுவுல உள்ளது. ஒரு பங்கை நாம சாதரணமா காலைல வாங்கி சாயுங்காலம் வித்தா தப்பில்லை ஆனா அதையே ஒரு ஆர்கனைஸ்டா வெறுமனே சில எதிர்ப்பார்ப்புகளை வைத்து ஏற்ற இறக்கங்களை நிர்ணயம் செய்வது நிச்ச‌ய‌மா சூதாட்ட‌த்துக்கு ச‌ம‌ம். அது போல‌ தான் டெரிவேடிவ் ம‌ற்றும் க‌ம்மாடிட்டி ட்ரேடிங்கும். ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் நிச்ச‌ய‌மில்லாத‌ எத‌ன் மீதும் வியாப‌ர‌ம் செய்வ‌தை த‌டுத்திருக்கிறார்க‌ள்‍.

நாஸியா said...

ஜஸகல்லாஹூ க்ஹைர் பராரி அவர்களே!

\\வங்கிகளில் சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதைவிட (வட்டி காரணம்) பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே நல்லது (லாப நஷ்டத்திலும் பங்கு) என்றே முஸ்லீம்கள் நிறைய பேர் நம்பி முதலீடு செய்கிறோம். அதுலயும் ஹராமான முறைகளைக் கொண்டு வந்தா என்னதான் செய்றது?\\

தாரளமா பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் தப்பே இல்லை. அதற்க்கு தானே பல ஷரியத்துக்கு உட்பட்ட நிதி நிறுவனங்கள் இப்ப இந்தியாவிலேயே கூட வந்திருக்கு. பங்கு சந்தையில் என்று சொல்வதை விட பங்கு சந்தையில் பட்டியிலடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் ஒரு சக பங்குதாரராக முதலீடு செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் ஹராமான தொழில் (வங்கி, சாராயம், கேளிக்கை, ஆயுதங்கள் தயாரிப்பு, போன்றவை) செய்யாமலும் அதிகமான கடன் பெற்றவைகளாகவும் இருக்க கூடாது. அதை பற்றி விரிவாக ஒரு நாள் எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ்.

நாஸியா said...

நன்றி சகோதரர் பீர் அவர்களே! நீங்கள் சொன்னபடி தங்கத்தோடு இணைப்பு கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது..பகிர்ந்தமைக்கு நன்றி!

\\வட்டி வாங்குபவர், கொடுப்பவர், சாட்சியளிப்பவர், கணக்கெழுதுபவர் என அத்தனை பேரும் குற்றவாளியே தண்டனைக்குரியவரே\\

சரியா சொன்னீங்க..அதையும் நான் சேர்த்திருக்கனும்

அதானே, அப்துல்லாஹ் அண்ணே உபயோகமான பல தகவல்களை தங்கள் வலைப்பதிவில் பகிர்ந்துக்கனும்!

\\ஆமா நாஸியா, நபித் தோழர்களும் தின வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ஹதீஸ்கள் இருக்கிறது. பண முதலீடு செய்து பொருள் வாங்கி லாபத்திற்கு அல்லது நட்டத்திற்கு விற்பது ஹராமாகாது. \\

ஒரு பொருளை வாங்கி, அதை அதிக‌ விலைக்கு விற்ப‌து ஹ‌ராமாகாது.. நீங்க சந்தைல குறைஞ்ச விலைக்கு வாங்கின பொருளை உங்க கடைல கூடுதலா விக்குறது தப்பில்லை. நீங்க‌ ஒரு ப‌ங்கை காலைல‌ வாங்குறீங்க‌, ஆனா சாயுங்கால‌மே "ஒரு வேளை த‌ப்பான‌ முடிவெடுத்துட்டோமோ"ன்னு அதை வித்தா த‌வ‌றில்லை. ஆனா உண்மையா டே ட்ரேடிங்க் வெறும் ந‌ம்ப‌ர் கேம்தான். ஒரு பங்கை காலைல ஒரு விலைக்கு வாங்குறது, அதோட விலை ஏறினதும் அடுத்த நொடியே விக்குறது, அல்லது ஷார்ட் செல்லிங்க் எனப்படும் இன்னும் விலை குறையும்னு நினைச்சு அதிக விலைக்கு விக்குற‌து, இதெல்லாம் தான் டே ட்ரேடிங்கை சூதாட்ட‌த்தோட‌ ச‌ம்ப‌த்த‌ப்ப‌டுத்துற‌து.

\\ஆனால் இல்லாத பொருளை வாங்கி விற்கும் கமோடிட்டி ட்ரேடிங் பற்றி சரியாகத் தெரியவில்லை. அப்துல்லா அண்ணே இது பற்றி என்ன நினைக்கிறீங்க?\\

இஸ்லாத்தை பொறுத்த‌ வ‌ரை "money on money is haram"..

எம்.எம்.அப்துல்லா said...

\ஆனால் இல்லாத பொருளை வாங்கி விற்கும் கமோடிட்டி ட்ரேடிங் பற்றி சரியாகத் தெரியவில்லை. அப்துல்லா அண்ணே இது பற்றி என்ன நினைக்கிறீங்க?\\


//இஸ்லாத்தை பொறுத்த‌ வ‌ரை "money on money is haram"..


//

ஆமாம்.money on money is 101% ஹராம்.அதில் மாற்றமே இல்லை.ஆனால் இதில் மணி ஆன் மெட்டீரியல் உண்டு. இல்லாத பொருள் என்று சொல்லமுடியாது.நீங்கள் டெலிவரி கேட்டால் கிடைத்து விடுகின்றதே.

எம்.எம்.அப்துல்லா said...

//ஆனா என்ன என் ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி 5-ஸ்டார் உதாரணம் சொல்லியிருக்கலாம்.) //

அவ்வ்வ்வ்வ்வ்


@பீர் அண்ணே, தனியாக டெக்னிக்கல் விஷயங்கள் எழுத பயம்.கொஞ்சம் தலைவலி புடுச்ச வேலை. சகோதரி நாஸியா போல் யாரேனும் துணுச்சலுடன் அதை செய்யும் போது சைடில் ஜாய்ண்டைப் போட்டுக்க வேண்டியதுதான் :)

மணிகண்டன் said...

அப்துல்லா, full convertability விளக்கினது அழகு. ஆனா, ஏன் reverse scenario விளக்காம இப்படி பண்ணினீங்க ? 50 ரூபா இருக்கும்போது கடன் வாங்கி இருந்தா ரெண்டு வருஷம் முன்னாடி 42 ரூபாய்க்கு திருப்பிச் செலுத்தி இருக்கலாமே :)-
நாசியா - ஹோம் லோன் பத்தி என்ன நினைக்கறீங்க ? இன்றைய நிலையில் சேமிப்பு மூலம் வீடு வாங்குவது சாத்தியப்படாதே ?

சீமான்கனி said...

அருமையான பதிவு சகோ குரான் வசனங்களோட வந்திருக்கு எனக்கு பல சந்தேகங்களை தீர்த்து வச்சுட்டீங்க ...நன்றி....கா..
அடடே பெரிய விவாதமே நடந்துருக்கு போல....!!!!???
எனக்கு கடன் வாங்குவதே பிடிக்காத காரியம்...இதுவரை தவீர்த்து இருக்கிறேன்...இன்ஷா அல்லா...இது தொடரனும்...
வாழ்த்துகள்...

நாஸியா said...

\\ஆமாம்.money on money is 101% ஹராம்.அதில் மாற்றமே இல்லை.ஆனால் இதில் மணி ஆன் மெட்டீரியல் உண்டு. இல்லாத பொருள் என்று சொல்லமுடியாது.நீங்கள் டெலிவரி கேட்டால் கிடைத்து விடுகின்றதே\\

எத்தனை பேர் கம்மாடிட்டி ட்ரேடிங்கில் டெலிவரி எடுக்கிறார்கள்? டே ட்ரேடிங்க், கம்மாடிட்டி ட்ரேடிங்க், டெரிவேடிவ்ஸ் எல்லாமே ஸ்பெகுலேசனின் அடிப்படையிலேயே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது.. பங்கு சந்தையை பொறுத்த வரை ஃபன்டமென்டல் இன்வெஸ்டிங்க் எனப்படும் ஒரு நிறுவனத்தை ஒரு நிறுவனமாக பாவித்து அதில் முதலீடு செய்யும் முறையே ஏற்புடையது. அது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல, பங்கு சந்தை முதலீடு மூலம் பெரும் பணக்காரர் ஆன வாரன் பஃபட் தாத்தாவுடைய முறையும் அதுதான்! :) இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் தாத்தாவை பற்றியும் அவர் கடைபிடிக்கும் முதலீட்டு முறையை பற்றியும் எழுதறேன்!

\\@பீர் அண்ணே, தனியாக டெக்னிக்கல் விஷயங்கள் எழுத பயம்.கொஞ்சம் தலைவலி புடுச்ச வேலை. சகோதரி நாஸியா போல் யாரேனும் துணுச்சலுடன் அதை செய்யும் போது சைடில் ஜாய்ண்டைப் போட்டுக்க வேண்டியதுதான் :)\\

நல்ல கதையா இருக்கே! நான் இது வரைக்கும் ஒரு அனலிஸ்டாகவே இருக்கிறேன் dealing only with information. ஒரு நிறுவனத்தில் நிதி நிர்வாகத்துறையில இருக்குற நீங்க தான் இன்னும் insightச் குடுக்க முடியும்! இன்னும் உங்க கிட்ட இருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்!

நாஸியா said...

நாசியா - ஹோம் லோன் பத்தி என்ன நினைக்கறீங்க ? இன்றைய நிலையில் சேமிப்பு மூலம் வீடு வாங்குவது சாத்தியப்படாதே ?

வீடு வாங்குவது நம்ம இஷ்டம் தானே? நல்லபடியா சேமிச்சு அப்பறம் வாங்கிக்கலாம்.. என்னை கேட்டா சேமிப்பு போக வட்டியில்லா கடன் கிடைச்சா அதை எடுத்துக்கலாம்! ஆனா வட்டிக்கடன் எல்லாம் strictly no- no!!

கொஞ்ச யோசிச்சு பாருங்க ஹோம் லோன் எல்லாம் ஒரு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்ததா? அப்பல்லாம் எப்படி வீடு கட்டினாங்க? இப்பல்லாம் கடனும் ஈசியா கிடைக்குது, வீட்டு விலைகளும் விண்ணை தொடுது.. இரண்டுக்கும் கன்னெக்ஷன் இருக்கலாம் தானே? வெளிப்படையா சொல்லனும்னா இந்த மாதிரி பேசுறது ரொம்ப outdateட் ஆ இருக்கலாம். ஆனா பல நேரங்கள்ல பணத்த பொறுத்த வரைக்கும் conservative approach தான் நம்மை காப்பாத்தும்!

நாஸியா said...

\\அருமையான பதிவு சகோ குரான் வசனங்களோட வந்திருக்கு எனக்கு பல சந்தேகங்களை தீர்த்து வச்சுட்டீங்க ...நன்றி....கா..\\

ந‌ன்றின்னு சொல்லிட்டு எதுக்கு என் பேச்சு கா விடுறீங்க‌? :)

அடடே பெரிய விவாதமே நடந்துருக்கு போல....!!!!???
எனக்கு கடன் வாங்குவதே பிடிக்காத காரியம்...இதுவரை தவீர்த்து இருக்கிறேன்...இன்ஷா அல்லா...இது தொடரனும்...
வாழ்த்துகள்...

மாஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ்.. ஆமீன்!! ஒரு ஹதீஸ் இருக்கு புஹாரில "செயல்கள் யாவும் எண்ணங்களை போலவே அமைகின்றன"... உங்க நிய்யத் ரொம்ப நல்லா இருக்கு, அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவானாக.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா, full convertability விளக்கினது அழகு. ஆனா, ஏன் reverse scenario விளக்காம இப்படி பண்ணினீங்க ? 50 ரூபா இருக்கும்போது கடன் வாங்கி இருந்தா ரெண்டு வருஷம் முன்னாடி 42 ரூபாய்க்கு திருப்பிச் செலுத்தி இருக்கலாமே :)-

//

குட் கொஸ்டீன் மணி அண்ணே :)

அரசு வாங்கும் கடன்கள் டாலர் கணக்கிலேயே பெறப்பட்டு டாலர் கணக்கிலேயே திரும்பவும் அளிக்கப்படுகின்ரது. காரணம் கடன் தரும் ஒருவர் திரும்பப் பெறும்போது அதே சரியான மதிப்பைப் பெற வேண்டும்.

ஆனால் முதலீடு அப்படி அல்ல. அந்த இடத்தின் தன்மைகொண்டு அமைவது.அமெரிக்காவில் ஒரு டீயின் விலை ஒரு டாலர் என்பதற்காக சென்னையில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு 4 ரூபாய்க்கு பதிலாக 48 ரூபாய் குடுப்பீர்களா??

இன்னும் தேவை என்றால் சொல்லுங்கள் ரிவர்ஸ் ஸ்கெனாரியோ பற்றி அதிக விளக்கங்களோடு விரிவாகவே சொல்லுறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//எத்தனை பேர் கம்மாடிட்டி ட்ரேடிங்கில் டெலிவரி எடுக்கிறார்கள்? டே ட்ரேடிங்க், கம்மாடிட்டி ட்ரேடிங்க், டெரிவேடிவ்ஸ் எல்லாமே ஸ்பெகுலேசனின் அடிப்படையிலேயே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது

//

உண்மைதான். டெலிவரி எடுக்க மாட்டேன் என்று முன் முடிவு செய்துகொண்டு ஈடுபடுவது கிட்டத்தட்ட அல்ல அறவே ஹராம்.

அப்புறம் தாத்தா பற்றி உங்கள் நடையில் படிக்க ஆவலோடு வெயிட்டிங்ஸ் :)

அவர் சொன்ன புகழ் பெற்ற அந்த வசனத்தையும் எழுத மறக்காதீங்க.

பீர் | Peer said...

மணி / அப்துல்லா அண்ணே, ரிவர்ஸ் ஸ்கெனாரியோ பற்றி யாராவது விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முடிந்தால் தனி இடுகையாக்குங்கள்.

@மணி, வட்டி ஹராம். அதில் வீடு கட்டினாலும் சரி அல்லது செங்கல் வாங்கினாலும் சரி. வட்டி இல்லா இஸ்லாமிய வங்கி இருக்கிறது தெரியுமா?

@நாஸியா, கடனில் தங்கத்திற்கு பதிலாக வேறு பொருளை மதிப்பாக்கலாமா? உதாரணம்; வீடு?

நாஸியா said...

by the way, ஃபுல் கன்வர்டபிளிட்டி என்பது கொஞ்சம் வேறல்ல? அதாவது எந்த விதமான கட்டுபாடும் இல்லாம இந்திய பணம் வெளிநாட்டுக்கு போறதும், வெளிநாட்டு பணம் இந்தியாக்குள்ள வர்றதும் தானே? இப்ப இருக்குற பார்ஷியல் கன்வர்ட்டபிளிட்டியில‌ நமக்கு சில கட்டுபாடுகள் இருக்கு, உதாரணதுக்கு ஒரு சாதாரண குடிமகன் இந்தியாவில இருந்து $25,000 வரைக்கும் தான் வெளிநாட்டுல செலவு செய்யலாம், ஒரு இந்திய நிறுவனம் அதனுடைய மொத்த மதிப்பின் அளவுக்கு அல்லது $100 மில்லியன் அளவு தான் வெளிநாட்டு வங்கியில கடன் வாங்கலாம், வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் (FII-Foreign Institutional Investors இவங்க நம்ம இந்திய பங்கு சந்தையில முதலீடு செய்பவர்கள்) ஒரு நிறுவனத்தின் 24% பங்கு வரைக்கும் தான் வாங்கலாம்.. அதே போல நேரடி வெளி நாட்டு முதலீட்டாளர்கள் (இவங்கள FDI-Foreign Direct Investmenட்) இங்க வந்து அவங்க தொழிர்சாலையை தொடங்கலாம், ஆனா அவங்க முதலீடு போக எவ்வளவு லாபத்தை வெளியே எடுத்துட்டு போகலாம் என்பதற்க்கும் நம்முடைய ரிசர்வ் வங்கி கட்டுபாடு விதிச்சிருக்கு


இப்ப இருக்குற பார்ஷியல் கன்வர்டபிளிட்டியால நமக்கு என்ன பயன்னா, வெளிநாட்டு பண சந்தையில் நடக்கும் பிரச்சினைகள் நம்மை அந்த அளவுக்கு பாதிக்காது. நம்ம ரிசர்வ் வங்கி எவ்வளவு பணம் நாட்டுக்குள்ள வரலாம், எவ்வளவு பணம் வெளிய போகலாம்னு ஒரு கட்டுபாடு விதிச்சதால திடீர்ன்னு ஒரு நியூஸ் வந்ததும் வெளிநாட்டுக்காரங்க எல்லாம் தங்களுடைய பணத்தை எல்லாம் அப்படியே எடுத்துட்டு போய்ட முடியாது.. ஆனா ஃபுல் கன்வர்டபிளிட்டி வந்தா அது போய்டும், நம்ம இந்திய ரூபாயின் மதிப்பும் குறைஞ்சிடும். அப்படியே இங்க ஒரு பெரிய க்ரைசிஸ் வந்துடும்.

நாம நம்முடைய foreign exchange policies இல் கொஞ்சம் கட்டுப்பாட்டோட இருந்ததால தான் 1997 தென்கிழக்காசிய நாடுகளையே புரட்டிப்போட்ட நிதி நெருக்கடி நம்மையும் தாக்காம இருந்துச்சு.. எப்பவும் பல நிதி நிர்வாக எக்ஸ்பர்டுகள் நம்ம ரிசர்வ் வங்கியை பாராட்டாம இருந்ததில்லை, மார்க் ஃபேபர் உட்பட.

நாஸியா said...

சகோதரர் பீர், தங்கம் என்பது பணத்தை போலவே எளிதாக பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒன்று (highly liquid).. ரெண்டுமே சமமா இருக்கறதால அதை வைத்து மதிப்பு செய்வது சரியா வரும்.. ஆனா வீடு அப்படி கிடையாது, அது கைமாறனும்னா கொஞ்சம் கஷ்டம்.. அதோட மதிப்பு செய்வது சரியா வராது..

எனக்கு வேற எந்த பொருளும் தோணலை

பித்தனின் வாக்கு said...

/ ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130) //
நல்ல கட்டுரை. நாஸியா. இதில் என் அனுபவத்தைச் சொல்ல ஆசைப்படுகின்றேன். நான் ஒரு இந்தியாவின் மிகப் பெரிய துணி நிறுவனங்களில் ஒன்றில் வேலை செய்த சமயம். திருவள்ளூரில் ஒரு ஹாஜியார் எங்கள் நிறுவனத்தில் மின் காப்புத் தொகை செலுத்தி இருந்தார். அதுக்கு வட்டி வாங்க மறுத்து விட்டார். அவரின் கணக்கில் வட்டி மட்டும் ஜந்து இலக்கத்தைத் தாண்டியது. எங்கள் நிறுவன கணக்காளரும் அதைத் தொடர்ந்து வட்டியில் வைத்துருக்க முடியாது என்றும் அவரை வாங்கிக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்கள். நானும் பல முறை அவரைக் கேட்டும் அவர் வாங்க மறுத்துவிட்டார். நானும் வாங்கி ஏழைகளுக்கு உதவுங்கள், அல்லது நீங்கள் கட்டும் பள்ளிவாசலுக்கு வைத்துக் கொள்ளூங்கள் என்று கூறியும் அவர் மறுத்துவிட்டார். பல முறை பலதடவை கொஞ்சியும் அவர் கேட்க வில்லை. அவர் பில்களுக்கு செட்டில் செய்யலாம் என்றால் அவர் எல்லா பில்லுக்கும் சரியாக பணம் அனுப்பினார். நான் என் நிறுவனத்தில் வட்டியை பில்லில் சரி செய்து, பின்னர் அவருக்கு டிஸ்கவுண்ட் என்று கொடுக்கலாம் என்று நினைத்தால் என் முயற்ச்சியைத் தெரிந்து அதையும் வாங்க மறுத்து விட்டார். அவர் என் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தார். ஆதலால் பொறுத்துப் பார்த்த நான் அதிரடியாக ஒரு காரியம் செய்தேன். என் நிறுவனத்தில் அவர் என்னை வாங்கச் சொல்லிவிட்டார் எனவும் கூறி காசாக பணமும், அவரின் கையொப்பம் இடவேண்டிய இரசிதும் வாங்கிக் கொண்டு நேராக அவரிடம் சென்று நான் வாங்கி வந்த விபரத்தைக் கூறினேன். சுமார் ஒரு மணி நேர விவாதத்திற்க்குப் பின்னும் அவர் மசியவியல்லை. நான் மிகவும் வேகமாகவும், பின்னர் சூடாகவும் அவரிடம், நான் இப்ப ஒரு காரியம் பண்ணப் போறேன், அதுன்னால உங்களுக்கு பாவம் எதுவும் இல்லை, ஆனால் எனக்குப் பாவம் என்றால் பரவாயில்லை. நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன். நான் செய்தது தவறு என்று நீங்கள் நினைத்தால் என்னைத் தண்டியுங்கள் அல்லது போலிஸிடம் என்னை புகார் செய்யுங்கள் என்று கூறி, அவரின் முன்பாக, அவர் முன் நின்று, அவரின் பார்க்கும் படியாக அவரின் கையெழுத்தை நான் அந்த இரசீதில் போட்டேன். ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆனவர். உடன் கோபத்தைக் கட்டுப்படுத்த கடையை விட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் நான் அந்தப் பணத்தில் ஒரு பைசா கூட எடுக்காமல், சரி பாதியாக பிரித்து அந்தக் கடையில் வேலை செய்த அனைவருக்கும் அடுத்த வார இரமலான் செலவுக்குக் கொடுத்து விட்டு வந்து விட்டேன். பின்னர் பதினைந்து நாள் கழித்து அவரைப் பார்த்த போது அவர் என்னப்பா இப்படிப் பண்ணிட்டாய்? நான் எதிர் பார்க்கவில்லை என்றும், நீ பண்ணியது நல்ல காரியம் என்பதால் நான் சும்மா விடுகின்றேன், இல்லை என்றால் நடப்பது வேறு என்றார். நானும் கூலாக இதுனால என்ன வாப்பா, இப்ப அப்பா கையெழுத்தை மகன் மார்க்ஸ்ஸீட்டில் போடுவதில்லையா? என்றேன். அவர் சிரித்து எப்படியே உன் தப்புக்கு நானும் உடந்தை என்றார். நான் தப்புக்கு நானும், புண்ணியத்திற்கு நீங்களும் பொறுப்பு என்றேன். ஆளை விடு உன்னிடம் பேசமுடியாது என்று சாப்பிட அழைத்துப் போனார். நன்றி நாஸியா.

பீர் | Peer said...

மிகச்சிறந்த உதாரணம் நண்பரே,

அன்று வட்டி பணத்தை வாங்காமல் இருந்ததினால் அவர் பொருளாதாரத்தில் எந்த அளவும் பின்தங்கியிருக்க மாட்டார் என்ற நம்புகிறேன்.

நன்றி.

malar said...

நாஸியா! உங்களுடைய பதிவு என்னை ரொம்ப கவர்ந்தது .

என்னுடைய வதாம் ஒருவரை கஷ்ட்ட படுத்தி வாங்கும் வட்டி குடாது .பாங்கில் போடும் பணத்திற்கு ஏன் வட்டி வாங்க கூடாது .நாம் போடும் பணத்தை கொண்டுதானா பேங்க் நடக்கிறது .அதில் வரும் லாபத்தில் நமக்கும் பங்கு உண்டுதானே ?

பீர் | Peer said...

மலர், வட்டிக்காக பேங்க் யாரையும் கஷ்டப்படுத்துவதில்லையா? எனில் அந்தக் கஷ்டப்படுத்துதலில் நமக்கும் பங்குண்டுதானே?

நாஸியா said...

சகோதரர் பித்தன், ரொம்ப சுவையா இருந்தது உங்க அனுபவம்.

ரொம்ப நன்றி மலர், உங்க வருகைக்கும் கருத்துக்கும்!

\\என்னுடைய வதாம் ஒருவரை கஷ்ட்ட படுத்தி வாங்கும் வட்டி குடாது .பாங்கில் போடும் பணத்திற்கு ஏன் வட்டி வாங்க கூடாது .நாம் போடும் பணத்தை கொண்டுதானா பேங்க் நடக்கிறது .அதில் வரும் லாபத்தில் நமக்கும் பங்கு உண்டுதானே ?\\


சகோதரர் பீரே பாதி விளக்கத்தை கொடுத்துட்டார்.. என்னுடைய பங்கு இதோ:
வங்கிகள் தாங்கள் கொடுக்கும் கடனை முதலீட்டாக பாவித்து, லாபத்தில் மட்டுமே பங்கு கேட்கலாம், நஷ்டம் வரும்போது எதுவும் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் சொல்வது சரி (அந்த மாடலில் தான் இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன). ஆனால் லாபமோ நஷ்டமோ கடனாளி வட்டிக்குரிய பணத்தை செலுத்த வேண்டும் என்பது கஷ்டப்படுத்துவது தானே?

ஷாகுல் said...

நிதியியல்ல புகுந்து விளையாடுறீங்க.

நல்ல பதிவு.நிறைய தெரிந்து கொண்டேன்.

Jaleela Kamal said...

நாஸியா வட்டி வாங்குவது ஹராம் என்பதை குர் ஆன் வசனத்தோடு சொல்லியது அருமை, இது எல்லோரையும சென்றடையும்.

சகோதரர் அப்துல்லாவும், நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

சுதாகர் சாருடைய அனுபவும், ரொம்ப நல்ல எழுதீருக்கிறார்.


கிரிட் காடில் தேய்பப்து என்னவோ பிரியா தர மாதிரி தான் எல்லோருக்கும் இருக்கு.

இப்ப உள்ள காலக்கட்டத்தில் கிரிட் கார்ட்டால் எல்லோரும் கடனாளிகளாக தான் இருக்கிறார்கள்.

நாஸியா said...

ரொம்ப நன்றி சகோதர் ஷாகுல்!

\\கிரிட் காடில் தேய்பப்து என்னவோ பிரியா தர மாதிரி தான் எல்லோருக்கும் இருக்கு.

இப்ப உள்ள காலக்கட்டத்தில் கிரிட் கார்ட்டால் எல்லோரும் கடனாளிகளாக தான் இருக்கிறார்கள்.\\

நூத்துக்கு நூறு உண்மை. கடனாளியாவதை விட்டும் இறைவன் நம் அனைவரையும் காப்பாற்றூவானாக.

நிஜமா நல்லவன் said...

அருமையான பதிவு. அப்துல்லா அண்ணன் நேற்று உங்கள் பதிவை பற்றி சொல்லி அவரின் பின்னூட்டம் படிக்க சொல்லி இருந்தார். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

நாஸியா said...

ரொம்ப நன்றி சகோதரரே!! தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

ஜோசப் பால்ராஜ் said...

அப்துல்லா அண்ணண்கிட்ட 1997-1998ல் கிழக்காசிய நாடுகளை தாக்கிய பொருளாதார நெருக்கடி குறித்து பேசிய போது சொன்னாரு, உங்க பதிவ படிங்கன்னு.

சூப்பரா எழுதியிருக்கீங்க சகோதரி, பல விசயங்கள் கத்துக்கிட்டேன். தொடர்ந்து துறை சார்ந்த பதிவுகள் பல எழுதுங்க.

BIM ல நீங்க எந்த வருசம் படிச்சிங்க?

நாஸியா said...

நன்றி சகோதரர் ஜோசப்.. சகோதரர் அப்துல்லாஹ் என் பதிவை பத்தி அவர் நண்பர்களிடம் பகிர்ந்துக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு.. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்க

எந்த வருஷம் படிச்சேன்னு கண்டிப்பா சொல்லனுமா? கொஞ்சம் privacy concern.. வேற ஒண்ணும் இல்லை. நீங்களும் பிம்மா?

*இயற்கை ராஜி* said...

நல்ல பதிவு.